தமிழகம்

தமிழக ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம் – குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு

49views

தமிழகத்தின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிறப்பித்துள்ளார்.

நாகாலாந்து மாநில ஆளுநராக பணியாற்றி வரும் ஆர்.என்.ரவியை தமிழக ஆளுநராக மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக தமிழக ஆளுநர் பொறுப்பை வகித்து வரும் பன்வாரிலால் புரோகித்துக்கு அண்மையில் பஞ்சாப் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பும் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பன்வாரிலால் புரோகித் இனி பஞ்சாப் மாநில ஆளுநராக மட்டும் பதவி வகிப்பார் என குடியரசுத் தலைவர் தனது உத்தரவில் கூறியுள்ளார்.

பீகார் மாநிலம் பாட்னாவை பூர்விகமாக கொண்ட ஆர்.என். ரவியின் முழுப் பெயர் ரவீந்திர நாராயண் ரவி ஆகும். பீகாரில் பிறந்திருந்தாலும் ஆர்.என். ரவி 1976ஆம் ஆண்டு கேரள பிரிவு ஐபிஎஸ் அதிகாரி ஆவார். கேரளாவிலும் பிறகு பிற மாநிலங்களிலும் காவல் துறையில் உயர் பொறுப்புகளை வகித்த ஆர்.என். ரவி, மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐயிலும் பணிபுரிந்துள்ளார். இது தவிர மத்திய அரசின் உளவுப்பிரிவான IB-யிலும் பணியாற்றியிருந்த ஆர்.என். ரவி, காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் பணியில் ஈடுபட்ட அனுபவம் கொண்டவர்.

2012ஆம் ஆண்டு காவல் துறையிலிருந்து ஓய்வு பெற்ற ஆர்.என்.ரவி, பின்னர் பிரதமர் அலுவலகத்தில் இணை உளவு குழு தலைவராக நியமிக்கப்பட்டார். கடந்த 2018ஆம் ஆண்டு தேசிய துணை பாதுகாப்பு ஆலோசகராக நியமிக்கப்பட்ட ஆர்.என்.ரவி அடுத்த ஆண்டே நாகாலாந்து ஆளுநராக நியமிக்கப்பட்டார். அங்கு 2 ஆண்டுகள் ஆளுநராக இருந்த ஆர்.என். ரவி தற்போது தமிழகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். இதற்கிடையே நாகாலாந்து ஆளுநராக ஜகதீஷ் முகி, உத்தரகாண்ட் ஆளுநராக குர்மீத் சிங் ஆகியோரை குடியரசுத் தலைவர் நியமித்துள்ளார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!