விளையாட்டு

யுஎஸ் ஓபன் டென்னிஸ் கால் இறுதியில் லெய்லா; கெர்பர், ஹாலெப் வெளியேற்றம்

49views

யுஎஸ் ஓபன் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதியில் விளையாட, கனடாவை சேர்ந்த டீனேஜ் வீராங்கனை லெய்லா பெர்னாண்டஸ் தகுதி பெற்றார். நான்காவது சுற்றில் ஜெர்மனியின் ஏஞ்சலிக் கெர்பருடன் (17வது ரேங்க், 33 வயது) மோதிய லெய்லா (73வது ரேங்க், 19 வயது) 4-6 என்ற கணக்கில் முதல் செட்டை இழந்து பின்தங்கினார். 2வது செட்டில் அவர் அனுபவ வீராங்கனை கெர்பருக்கு கடும் நெருக்கடி கொடுக்க, ஆட்டம் டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்தது. அதில் அபாரமாக செயல்பட்ட லெய்லா 7-6 (7-5) என வென்று பதிலடி கொடுக்க சமநிலை ஏற்பட்டது.

 

அதே உற்சாகத்துடன் 3வது மற்றும் கடைசி செட்டில் அதிரடியாக விளையாடி புள்ளிகளைக் குவித்த லெய்லா 4-6, 7-6 (7-5), 6-2 என்ற செட் கணக்கில் 2 மணி, 15 நிமிடம் போராடி வென்று முதல் முறையாக கிராண்ட் ஸ்லாம் தொடரின் கால் இறுதிக்கு முன்னேறினார். இது அவருக்கு பிறந்தநாள் பரிசாகவும் அமைந்தது. மற்றொரு 4வது சுற்றில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவுடன் (5வது ரேங்க், 27 வயது) மோதிய சிமோனா ஹாலெப் (13வது ரேங்க், 30 வயது) 3-6, 3-6 என்ற நேர் செட்களில் சரணடைந்தார். இப்போட்டி 1 மணி, 16 நிமிடத்திலேயே முடிவுக்கு வந்தது. முன்னணி வீராங்கனைகள் அரினா சபலென்கா (பெலாரஸ்), பார்போரா கிரெஜ்சிகோவா (செக்.) ஆகியோரும் கால் இறுதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

அல்கராஸ் அசத்தல்: ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் ஜெர்மனியின் கோஜோவ்சிக்குடன் (141வது ரேங், 32 வயது) மோதிய 18 வயது இளம் வீரர் கார்லோஸ் அல்கராஸ் (55வது ரேங்க், ஸ்பெயின்) 5-7, 6-1, 5-7, 6-2, 6-0 என்ற செட் கணக்கில் மூன்றரை மணி நேரம் போராடி வென்று கால் இறுதிக்குள் நுழைந்தார். மைக்கேல் சாங்குக்கு பிறகு (1980) கிராண்ட் ஸ்லாம் தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவு கால் இறுதிக்கு முன்னேறிய மிக இளம் வயது வீரர் என்ற பெருமை அல்கராஸுக்கு கிடைத்துள்ளது. மற்றொரு 4வது சுற்றில் அமெரிக்காவின் பிரான்சிஸ் டியபோவுடன் மோதிய பெலிக்ஸ் ஆகர் அலியஸ்ஸிமி (21 வயது, கனடா) 4-6, 6-2, 7-6 (8-6), 6-4 என்ற செட் கணக்கில் 3 மணி, 24 நிமிடம் போராடி வென்று கால் இறுதிக்கு தகுதி பெற்றார். முன்னணி வீரர்கள் டானில் மெட்வதேவ் (ரஷ்யா), டீகோ ஷ்வார்ட்ஸ்மேன் (அர்ஜென்டினா) ஆகியோரும் கால் இறுதிக்கு முன்னேறி உள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!