டோக்யோ பாராலிம்பிக் தொடரின் கடைசி நாளில் இந்தியா 2 பதக்கங்களை வென்று, மொத்தம் 19 பதக்கங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் பாராலிம்பிக் போட்டி நிறைவடைந்தது.
ஜப்பான் தலைநகர் டோக்யோவில் மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் பாராலிம்பிக் தொடர் கடந்த மாதம் 24ம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் இந்தியா, சீனா, அமெரிக்கா உட்பட 163 நாடுகள் பங்கேற்றன. இந்தியாவை பொறுத்தவரை 9 வகையான ஆட்டங்களில் 54 வீரர்கள் கலந்து கொண்டனர். இறுதி நாளான ஞாயிற்றுக்கிழமை SH6 பிரிவு பேட்மின்டன் இறுதிப்போட்டியில், சீன வீரர் காய் சூ மானை, இந்திய வீரர் கிருஷ்ணா நகர் எதிர்கொண்டார். 21-17 என்ற புள்ளிக் கணக்கில் முதல் செட்டை தன்வசப்படுத்திய அவர், 2வது செட்டை 16-21 என்ற புள்ளி கணக்கில் இழந்தார்.
3வது செட்டின் கடைசி நிமிடத்தில் அற்புதமாக பந்தை ஸ்மாஷ் செய்த கிருஷ்ணா நகர் 21-17 என அந்த செட்டை கைப்பற்றி தங்கம் வென்று அசத்தினார்.
இதேபோல் ஆடவருக்கான எஸ்.எல்.4 பிரிவு பேட்மின்டன் இறுதிப்பேட்டியில் பிரான்ஸ் வீரர் மசூர் லூகாஸை எதிர்கொண்ட இந்திய வீரர் சுஹாஸ் யதிராஜ் 21-15, 17-21, 15-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்தார். இதனால் இரண்டாம் இடம் பிடித்த யதிராஜூக்கு, வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. வெள்ளிப் பதக்கம் வென்றுள்ள யதிராஜ், நொய்டா மாவட்ட ஆட்சித் தலைவர் ஆவார்.
இதன் மூலம் பாராலிம்பிக்கில் 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்களுடன் இந்திய அணி, பதக்கப் பட்டியலில் 24வது இடத்தை பிடித்தது. 1968ம் ஆண்டு முதல் 2016 வரை, பாராலிம்பிக்கில் இந்தியா 12 பதக்கங்களை மட்டுமே பெற்றிருந்த நிலையில், இந்த முறை 19 பதக்கங்களை வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.
இந்நிலையில் பேட்மின்டனில் தங்கம் வென்ற கிருஷ்ணா நகர், வெள்ளிப்பதக்கம் வென்ற யதிராஜை, செல்போனில் தொடர்பு கொண்டு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டினார். இந்திய விளையாட்டு வரலாற்றில் டோக்யோ ஒலிம்பிக்கிற்கு எப்போதும் தனி இடம் இருக்கும் என்றும், இந்த விளையாட்டு ஒவ்வொரு இந்தியரின் நினைவாக பொறிக்கப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி டிவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
தமது மிகப்பெரும் கனவு நிறைவேறியிருப்பதாக பேட்மின்டனில் தங்கம் வென்ற கிருஷ்ண நகரும், பாராலிம்பிக்கில் பதக்கம் வெல்வேன் என எண்ணியதே இல்லை என, வெள்ளிப்பதக்கம் வென்ற யதிராஜூம் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் டோக்யோ தேசிய மைதானத்தில் பாராலிம்பிக் தொடரின் நிறைவு விழா நடைபெற்றது. வீரர்களுக்கான அணிவகுப்பில், இந்திய அணி சார்பில் துப்பாக்கி சுடுதலில் தங்கம் மற்றும் வெண்கலம் வென்ற அவனி லெகரா தேசியக்கொடி ஏந்திச்சென்றார்.
12 நாட்கள் நடந்த போட்டிகளின் நிறைவு விழா வாண வேடிக்கைகளுடன் பார்வையாளர்களை கவரும் வகையில் வண்ணமயமான நிகழ்ச்சியாக அமைந்தது. அடுத்த பாராலிம்பிக் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரீசில் வரும் 2024ம் ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி தொடங்குகிறது.