இந்த மாத இறுதியில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக பிரதமர் மோடி செல்ல உள்ளார்.
பிரதமரின் இந்த பயணம் இரண்டு நாட்கள் கொண்டதாக இருக்கும் என்றும், தேதிகள் இன்னும் முடிவு செய்யப்படாத நிலையில், செப்டம்பர் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பிரதமர் அமெரிக்க செல்ல வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.
அவர் வாஷிங்டன் மற்றும் நியூயார்க் நகரங்களுக்கு செல்ல இருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இந்தப்பயணத்தில் அதிபர் ஜோ பைடனை மோடி சந்திக்க உள்ளார். பைடன் பதவியேற்ற பிறகு முதலில் அமெரிக்கா செல்கிறார். இருவரின் பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் விவகாரம் முக்கியத்துவம் இடம்பெறக்கூடும் என்று கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையிலும் பிரதமர் மோடி உரையாற்ற இருக்கிறார். நியூயார்கில் உள்ள தலைமையகத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 76வது ஆண்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது.
மேலும் வாஷிங்டனில் நடைபெறும் குவாட் தலைவர்களின் மாநாட்டில் பிரதமர் கலந்து கொள்ள இருக்கிறார். அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் இணைந்து குவாட் எனும் அமைப்பை உருவாக்கியுள்ளன.
பிரதமர் மோடி கடைசியாக 2019ம் ஆண்டு டொனால்ட் ட்ரம்ப் அதிபராக இருந்தபோது அமெரிக்கா சென்றிருந்தார். அதன்பிறகு தொடர்ந்து கொரோனா பரவல் காரணமாக உலக நாடுகள் அனைத்தும் அதை எதிர்த்து போராடுவதில் கவனம் செலுத்தி வந்த நிலையில், பிரதமர் அமெரிக்க செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.