தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அரசியல் கட்சிகளுடன் இன்று ஆலோசனை நடத்த இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் இன்று மதியம் 12 மணிக்கு இந்த கூட்டம் நடைபெற இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை பெருக்கம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், திருநெல்வேலி மாவட்டத்தை பிரித்து தென்காசி; விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து கள்ளக்குறிச்சி; காஞ்சீபுரத்தில் இருந்து செங்கல்பட்டு; வேலூரில் இருந்து ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய தனி மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இந்த 9 மாவட்டங்களை தவிர மற்ற 27 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தேர்தல் நடைபெற்றது.
ஆயினும், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி ஆகியவற்றுக்கான நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் 9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் மற்றும் நகர்ப்புற தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இதனையடுத்து விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31ஆம் தேதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்குப்பதிவு நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை உள்ளாட்சி தேர்தல் காலை 7 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே நடத்தப்பட்டு வந்தது. ஆனால் கொரோனா பரவலை கருத்திக்கொண்டு இனி காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. தேர்தலை நடத்துவதற்கான வாக்குப்பதிவு அதிகாரிகள் நியமனமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், விரைவில் தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் இன்று ஆலோசனை நடத்துகிறார். இந்த கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு நடைபெறவுள்ளது. கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அங்கீகரிக்கப்பட்ட கட்சிகள் அனைத்துக்கும் தேர்தல் ஆணையம் அழைப்பு அனுப்பியுள்ளது.
ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள் பதவிக்கான இடங்கள் குறித்தும், தேர்தலை எப்போது நடத்துவது என்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளது. கட்சி பிரதிநிதிகளின் கருத்தை அறிந்து அதற்கேற்ப தேர்தல் நடத்துவதற்கான தேதி வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அரசியல் கட்சியினர் இந்த கூட்டத்தில் கொரோனா கட்டுப்பாடுகளை கடைபிடித்து பங்கேற்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.