ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் நடைபெற்று முடிந்ததையடுத்து தற்போது மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக்ஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் கடந்த 24ஆம் தேதி முதல் தொடங்கியது. இந்தியாவிலிருந்து 54 வீரர்கள் கலந்துகொண்டுள்ளனர். வில்வித்தை, தடகளம், பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ் குதிரையேற்றம் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்று வருகின்றன. டேபிள் டென்னிஸ் போட்டியில் இந்திய வீராங்கனை பவினா படேல் வெள்ளி வென்று இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வாங்கி கொடுத்தார்.
தொடர்ந்து உயரம் தாண்டுதலில் ஒற்றை கையுடன் போடியிட்டு வெள்ளிப் பதக்கம் வென்றார் இந்தியா வீரர் நிஷாத் குமார். வட்டு எறிதலில் யோகேஷ் கத்தூனியாவின் வெள்ளி, துப்பாக்கிச் சுடுதலில் அவனி லெகராவின் தங்கம், ஈட்டி எறிதலில் சுமித் அண்டிலின் தங்கம், தேவேந்திராவின் வெள்ளி, சுந்தர் சிங்கின் வெண்கலம், துப்பாக்கிச் சுடுதலில் சிங்ராஜின் வெண்கலம், உயரம் தாண்டுதலில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலுவின் வெள்ளி, ஷரத் குமாரின் வெண்கலம் என இதுவரை 10 பதக்கங்களை இந்தியா குவித்துள்ளது.
இச்சூழலில் இந்திய பேட்மிண்டன் வீரர் பிரமோத் பகத் அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். லீக் சுற்றில் மற்றொரு இந்திய வீரர் மனோஜ் உடன் மோதிய அவர் 21-10, 21-23, 21-9 என்ற செட் கணக்கில் வென்றார். இன்று உக்ரைன் வீரர் ஒலக்சாண்டர் சிர்கோவுன் மோதினார். 21-12, 21-9 என்ற நேர் செட் கணக்கில் ஒலெக்சாண்டரை வீழ்த்தி பிரமோத் பகத் அரையிறுதிக்குள் காலடி எடுத்துவைத்துள்ளார். அரையிறுதியில் வெற்றிபெற்றால் அவருக்கு வெள்ளிப் பதக்கம் உறுதிசெய்யப்பட்டு விடும். இறுதிப்போட்டியில் வென்றால் தங்கம் கிடைக்கும். பேட்மிண்டன் தரவரிசையில் உலகின் நம்பர் 1 வீரராக பிரமோத் திகழ்வது கவனிக்கத்தக்கது.