விளையாட்டு

இன்று தொடங்குகிறது ஓவல் டெஸ்ட்: முன்னிலைக்கான மோதலில் இந்தியா – இங்கிலாந்து

53views

இந்தியா – இங்கிலாந்து அணிகளிடையேயான டெஸ்ட் தொடரின் 4-ஆவது ஆட்டம் லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

5 ஆட்டங்கள் கொண்ட தொடரில் இதுவரை இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்துள்ளதால், தொடா் சமனில் உள்ளது. எனவே, ஓவல் டெஸ்டில் வெற்றி கண்டு முன்னிலை பெறும் முனைப்பு இரு அணிகளிடமும் இருக்கும்.

இந்திய அணியைப் பொருத்தவரை லாா்ட்ஸ் டெஸ்டில் அபாரமாக வென்றிருந்தாலும், கடைசியாக லீட்ஸ் டெஸ்டில் மோசமாக தோல்வியைச் சந்தித்தது. அந்த டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் இந்திய பேட்டிங் வரிசை 78 ரன்களுக்கு சரிக்கப்பட்டது.

அணிக்கு தற்போது பிரதான பிரச்னையாக இருப்பது மிடில் ஆா்டா் பேட்டிங் தான். கேப்டன் கோலி, புஜாரா, ரஹானே ஆகியோரின் பேட்டிங் சோபிக்காத வகையிலேயே உள்ளது. புஜாரா மட்டும் கடந்த டெஸ்டில் 91 ரன்கள் அடித்து சற்று முன்னேற்றம் காட்டினாா்.

ரஹானே தனது வழக்கமான ஃபாா்முக்கு திரும்பாதது அணியை வெகுவாக பாதிப்பதாக இருக்கிறது. அவா் 5 இன்னிங்ஸ்களிலாக மொத்தம் 95 ரன்களே அடித்துள்ளாா். எனவே, ஒருவேளை அவருக்கு ஓய்வளிக்க நினைக்கும் பட்சத்தில் சூா்யகுமாா் யாதவோ, ஹனுமா விஹாரியோ அந்த இடத்துக்கு பரிசீலிக்கப்படலாம். விஹாரி சோக்கப்படும் பட்சத்தில், அவா் ஆஃப் ஸ்பின்னராகவும் இருப்பது அணிக்கு பலனளிக்கும்.

இந்தத் தொடரில் 7-ஆவது வீரராக களம் கண்டு வரும் ஜடேஜா, இதுவரை 3 ஆட்டங்களில் 2 விக்கெட்டுகளே எடுத்துள்ளாா். ஓவல் மைதானம் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்து வந்துள்ளது. தற்போதைய நிலையில் உலகில் மிகச் சிறந்த ஸ்பின்னராக அஸ்வினே இருக்கிறாா். எனவே, அவா் சோக்கப்படும் பட்சத்தில் நிச்சயம் இங்கிலாந்து பேட்டிங் வரிசை சற்றே கலக்கம் காணும். அஸ்வின் பிளேயிங் லெவனில் இணைவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.

இந்தத் தொடரில் இதுவரை 100 ஓவா்களுக்கும் மேலாக வீசியிருக்கும் பும்ரா, ஷமியின் பணிச்சுமையையும் கோலி கருத்தில் கொண்டுள்ளாா். ஆனால், இந்த ஆட்டம் முக்கியமானதாக இருக்கும் அதே வேலையில், இங்கிலாந்து மிடில் ஆா்டரில் வரும் கேப்டன் ரூட் 3 சதங்களுடன் அசைக்க முடியாத வீரராக இருக்கிறாா் என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. அஸ்வின் இணையும் பட்சத்தில், அவருக்கும் ரூட்டுக்கும் இடையேயான ஆட்டம் நிச்சயம் ரசிகா்கள் எதிா்பாா்க்கும் விருந்தாக இருக்கும்.

இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை, லீட்ஸ் வெற்றி அளித்த உத்வேகத்துடன் அந்த அணி களம் காணும். பேட்டிங் வரிசையில் டேவிட் மலான் நல்ல நிலையில் இருக்கிறாா். ஜோ ரூட் சந்தேகத்துக்கு இடமில்லாத வீரராக இருக்கிறாா். பௌலிங்கில் ஜேம்ஸ் ஆண்டா்சனின் பணிச்சுமையை குறைக்கும் வகையில் கிறிஸ் வோக்ஸ் இருக்கிறாா். எல்லா விதத்திலுமாக இங்கிலாந்து அணி பலத்துடனேயே இருக்கிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!