கட்டுரை

வ.உ.சி 150

333views
01. ஆசிரியர்களைப் போற்றும் அறவோன்
அன்றைய காலகட்டத்தில் இலக்கியவாதிகள், எழுத்தாளர்கள் என பலரும் தன் வரலாறு எழுதினார்கள். சான்றாக… திரு.வி.க. ‘வாழ்க்கைக் குறிப்புகள்’ (1944), நாமக்கல் கவிஞர் ‘என் கதை’ (1947), திரு.சே. சௌ. ராஜன் ‘நினைவு அலைகள்’ (1947), உ.வே.சா. ‘என் சரித்திரம்’ (1950), சுத்தானந்த பாரதியார் ‘ஆத்மசோதனை’ (1950). இப்படி பலர் எழுதியிருந்தாலும் முழுக்க முழுக்க ஆசிரியப்பாவால் தனது சுயசரிதையை எழுதிய முதல் விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரம் மட்டுமே.
காந்தி தொடங்கி கலாம் வரையிலும் பலர் தங்களது வாழ்வியல் நிகழ்வுகளைப் பதிவு செய்திருந்தாலும் தனக்குக் கற்பித்த ஆசிரியர்கள் ஒருவரைக்கூட மறவாமல்… விடாமல்… பதிவு செய்த ஒப்பற்ற மனிதர் வ.உ.சி.
ஆறு வயதில் தனக்குக் கற்பித்த முதல் ஆசிரியரான வீரப்பெருமாள் அண்ணாவி பற்றி தனது சரிதையில் இரண்டு பக்கங்கள் முழுக்க எழுதியுள்ளார்.
‘பாண்டியபுரத்தில் (ஊர்) மிகச்சிறந்த வேளாண்குலத்தில் தோன்றிய சான்றோன்; பெரியோன்; வாய்மை என்பதையே வாக்கிற் கொண்டோன்; தூய்மையான சிந்தை உடையோன்; ஒழுக்கம் பலவும் உடையவன்; இழுக்கமே இல்லாத நல்லவன்; சாந்தம் பொறுமை தகுதிக்கெல்லாம் அரசன் எனப்படுபவன்; விருந்தினர்களைப் போற்றுபவன்; திருந்திய சொல்லும் செயலும் உடையவன்; சிறந்த தமிழ் நூல்களை எல்லாம் கற்று… கற்பிக்கும் திறனுடையோன்; பத்து நாளானாலும் கருடனை வணங்காமல் நீர் கூட பருகாத பக்தியாளன்; உருத்திராட்ச மணி மாலையும் திருநீறும் அணியப்பெற்றவன்; நாற்பது வயதுடையோன்’ என்று தனது முதல் ஆசானின் பெருமையைக் கூறும் வேளையில் அரிச்சுவடி, ஆத்திசூடி, எண் சுவடி, எழுதும் சட்டம், உலக நீதி, கொன்றை வேந்தன், குழிப்பெருக்கம், வெற்றிவேற்கை, நளவெண்பா, மூதுரை என அவரிடம் படித்த பாடங்களையும் பட்டியலிடுகிறார்.
அவரைத் தொடர்ந்து, கிருஷ்ணன் என்பவரை நல்லோன், வாநிறமேனியோன், அருள்திறம் நிறைந்த அந்தணன் எனப் புகழ்ந்து இரண்டாண்டுகள் அவர் தமக்கு அழகுற ஆங்கிலம் கற்பித்ததைப் பதிவு செய்கிறார்.
வ.உ.சி.க்காக அவரது தந்தை ஓட்டப்பிடாரம் சிவன் கோவில் தெருவில் ஒரு பள்ளிக்கூடம் அமைத்தார். வ.உ.சி. ஒருவருக்காக பெய்த கல்வி மழையில் அவ்வூரே நனைந்தது. அவ்வூரிலுள்ள பலரும் அங்கு சேர்ந்து பயின்றனர்.
‘எட்டயபுரத்தைச் சேர்ந்தவர்; தமிழும் ஆங்கிலமும் சிறப்புறக் கற்றவர்; அனைவருக்கும் இன்புற உணர்த்தும் திறம் கொண்டவர்; நல்லறமும் புகழும் உடையவர்’ என்று ஆசான் அறம் வளர்த்த நாதன் பற்றி எழுதுகிறார்.
இரண்டு ஆண்டுகளில் நான்கு வகுப்புகளைக் கடந்த வ.உ.சி. அந்தப் பள்ளியின் மேற்பார்வையாளர் ஆடம்ஸன் எனும் ஆங்கில பாதிரியாரைப் பற்றிக் குறிப்பிடும்போது, “நாடு மதித்திட நல்ல கிறிஸ்தவ மதத்தினை மிக்க வலத்தோடும் தக்க பதத்தோடும் விதைத்த பண்புடையாளர் மதநூல் தவிர மற்றவை பயின்றேன்” என்கிறார். அந்தப் பாதிரியார் மூலம் சுவாமிநாதன், சண்முகம்பிள்ளை ஆகியோரிடம் ஐந்து மற்றும் ஆறாம் வகுப்புகளைக் கற்றுத் தேர்ந்தார். சுவாமிநாதனை தூயோன், மேலோன் என்றும், சண்முகம் பிள்ளையை சாலப்படித்தவர் என்றும் உயர்வாய்க் குறிப்பிடுகிறார். தூத்துக்குடி ரோமன் கத்தோலிக்கப் பள்ளியில் அவருக்குக் கற்பித்த ஆசிரியர் மதுரநாயகம் என்பவரை ‘மாண்புநிறை புலவர்; மிகச் சிறப்பாய் கற்பித்த திறனுடையோர்; என்றாலும் அந்தத் தேர்வில் என்னுடைய குறைவால் தான் தேர்ச்சியடையவில்லை’ என்று கண்ணாடிபோல் பதிவு செய்த உத்தமசீலராக நம்முன் உயர்ந்து நிற்கிறார் வ.உ.சி.
அதே பள்ளியில் தனக்குக் கற்பித்த அண்ணாத்துரை ஆசிரியரை, ‘அபாத்திரத்தைக்கூட அழகுறச் செய்யும் வல்லமை கொண்டவர்; உத்தமர்; அழகான பெயருக்கு உரியவர்; கற்பதற்குப் பொருந்தாதவரையும் பொருந்தும்படி செய்பவர்; நல்ல திறமையும் அருளும் நிரம்பப் பெற்றவர்; அறிவும் (தெருள்), புகழும் சிறக்கும்படிச் செய்தவர்; என்னைத் தன் மகனைப்போல ஏற்றுக் கல்வி போதித்தவர்; பகலில் பள்ளியிலும் இரவில் இல்லத்திலும் வைத்து அறிவுப் பகலவனாய்ப் பண்புடன் போதித்தவர்; நிர்வாகி கெளசானல் பாதிரியாரின் அன்பை மிகுதியாய்ப் பெற்றவர்’ எனப் பலவாறாகப் புகழ்ந்ததோடல்லாமல் பள்ளி நிர்வாகியின் பெயரையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை.

அடுத்ததாக, கஸ்தூரி ஐயர் என்ற ஆசிரியரைப் பற்றிச் சொல்லும்போது, ‘உயர்ந்த கல்வியை மாசறக் கற்றவர்; நல்லவைகளிலும் நல்லவைகளையே கற்பிப்பவர்’ எனப் புகழ்ந்துவிட்டு, ‘நாலு முழமே நாளும் புனைபவர்’ என அவரது ஆடை எளிமையையும் நினைவுகூர்கிறார்.
பின்னர், ‘நாட்டுக்கு நலம் தரக்கூடிய தமிழைச் சிறப்பாகக் கற்றுணர்ந்து போதிப்பவர்’ என்று சவரிராயர் பற்றி எழுதுகிறார். அந்த ஆண்டு தேர்வில் தோற்று பின் வெங்குசாமி என்பவரிடம் கற்றபின் வெற்றி பெற்றதாகக் குறிப்பிடுகிறார்.
திருச்சியில் சட்டக்கல்வி பயிற்றுவித்த கணபதி ஐயர், அரிகரமய்யர் போன்றவரையும் மறவாமல் தனது சரிதையில் குறிப்பிட்டு தன் நன்றியுணர்வை வெளிப்படுத்துகிறார்.
பள்ளி, கல்லூரிக்கு அப்பாற்பட்டு தனக்கு அறிவு புகட்டியவர்களையும் வ.உ.சி. குறிப்பிட மறக்கவில்லை. அல்லிக்குளத்து சுப்பிரமணியபிள்ளையிடம் பாரதமும், பாட்டி மீனாட்சியிடம் திருவிளையாடற்புராணமும், பாட்டனாரிடம் இராமாயணத்தையும், கட்டாரிச் சாமியாரிடம் இன்னிசைப் பாடல் மற்றும் துறவிகளின் உரைகளையும் கேட்டுத் தெளிவு பெற்றதை சரிதை வழியே தருகிறார்.
ஆசிரியராய் இருந்து நாட்டின் உயர் அரியணை ஏறிய டாக்டர் ராதாகிருஷ்ணன் நினைவாக செப்டம்பர் ஐந்தாம் நாள் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பது நாடறிந்ததுதான்.
ஆனால், அதேநாள்தான், தனக்குக் கற்பித்த ஆசிரியர்களைப் போற்றிப் பதிவு செய்து உண்மையான குருபக்தியை வெளிப்படுத்திய சீடராகச் சுடர் விடுகிற சீலர், மாமனிதர் வ.உ.சி.யின் பிறந்தநாள் என்பதை நாடு மறந்துபோனதுதான் வேதனைக்குரியது.
  • ஜோல்னா ஜவஹர்

(வாழ்க்கை பேசும்)

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!