செப்டம்பர் இறுதிக்குள் காவிரியில் 64.62 டிஎம்சி நீரை கர்நாடகம் திறந்துவிட வேண்டும்: ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தல்
காவிரியில் கடந்த 3 மாதங்களாக தரப்படாமல் உள்ள நிலுவை நீர் மற்றும் செப்டம்பர் மாதத்தின் பங்கு உள்பட 64.62 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் வழங்க வேண்டும் என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்தியது. ஆனால், கர்நாடகம் வழங்குவதாக ஒப்புக்கொண்ட 7 டிஎம்சி தண்ணீரை ஏற்க தமிழகம் மறுத்துவிட்டது. காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 13-ஆவது கூட்டம் அதன் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தலைமையில் தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. தமிழக அரசின் சார்பில் பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலர் டாக்டர் சந்தீப் சக்úஸனா, காவிரி தொழில்நுட்பக் குழுத் தலைவர் ஆர்.சுப்ரமணியன் மற்றும் கர்நாடகம் சார்பில் நீர்வளத் துறையின் கூடுதல் தலைமைச் செயலர் ராகேஷ் சிங் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
காவிரியில் தமிழகத்துக்கு இந்த ஆண்டு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை கர்நாடகம் 86 டிஎம்சி தண்ணீரை அளித்திருக்க வேண்டும். ஆனால், ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை 56 டிஎம்சி தண்ணீரை மட்டுமே கர்நாடகம் வழங்கியுள்ளது. உபரிநீரைத்தான் பெற்றுள்ளோம். ஆகஸ்ட் 31- ஆம் தேதி வரை 27.86 டிஎம்சி தண்ணீர் வரை கர்நாடகம் வழங்காமல் உள்ளதாகக் கூட்டத்தில் தமிழகம் முறையிட்டது.
இதற்கு கர்நாடகம் பதிலளிக்கையில், மழைப் பற்றாக்குறையின் காரணமாக கடந்த சில மாதங்களாக நீர்வரத்து குறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. மேலும், கபினி, கிருஷ்ணராஜ சாகர் உள்ளிட்ட 4 அணைகளுக்கு ஜூன் முதல் ஆகஸ்ட் வரை வரவேண்டிய சராசரி அளவான 209 டிஎம்சிக்கு பதிலாக 156 டிஎம்சி தண்ணீர் மட்டுமே வந்துள்ளதாகவும், இந்த பற்றாக்குறை (25 சதவீதம்) கணக்கீட்டின்படியே தண்ணீரை 4 மாநிலங்களும் பகிர்ந்து கொள்ளவேண்டும் எனவும் கர்நாடகம் வலியுறுத்தியது. இதன்படி 7 டிஎம்சி தண்ணீர் மட்டுமே தமிழகத்துக்கு வழங்கப்படும் எனவும், மழை, நீர்வரத்து அடிப்படையில் செப்டம்பர் மாதத்துக்கு காவிரியில் தண்ணீர் வழங்கப்படும் எனவும் கர்நாடகம் கூறியது.
இதை ஆணையம் முதலில் ஏற்றுக் கொண்டது. ஆனால், தமிழக அதிகாரிகள் ஏற்றுக் கொள்ளவில்லை. தண்ணீர் இருப்பு தொடர்பான புள்ளிவிவரத் தகவல்களை கூட்டத்தில் தமிழகம் தெரிவித்தது. கர்நாடகத்தின் 4 அணைகளுக்கு நீர்வரத்து 156 டிஎம்சி மட்டுமே இருப்பதாகக் கூறப்பட்டாலும், தற்போது 4 அணைகள் மூலம் கர்நாடகத்திடம் நீர் இருப்பு 98 டிஎம்சி யாக உள்ளது. இதனால், தமிழகத்துக்கு கடந்த 3 மாதங்களுக்கான நிலுவை தண்ணீரை கர்நாடகம் உடனடியாக வழங்க வேண்டும். இதன்படி, இதுவரை வழங்க வேண்டிய 27.86 டிஎம்சி, செப்டம்பர் மாதப் பங்கான 36.76 டிஎம்சி தண்ணீர் என மொத்தம் 64.62 டிஎம்சி தண்ணீரை இந்த மாத இறுதிக்குள் கர்நாடகம் திறந்துவிட வேண்டும் என்று தமிழகம் வலியுறுத்தியது.
ஆணையம் நம்பிக்கை: கூட்டத்திற்கு பிறகு, எஸ்.கே. ஹல்தார் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கர்நாடகம் 25 சதவீதம் தண்ணீர் வரத்து குறைவாக வந்துள்ளதாகக் கூறுகிறது. தமிழகத்தில் வருகின்ற மாதங்களில் குறுவை, சம்பா சாகுபடிக்கு அதிக அளவு தண்ணீர் தேவையுள்ளது. மேட்டூரிலும் தண்ணீர் குறைவாகவே உள்ளது. தமிழகத்தின் தேவையைக் கருத்தில் கொண்டு கர்நாடகம் தண்ணீர் வழங்க உறுதியளித்துள்ளது. செப்டம்பர் மாதம் மழை அதிகமாகப் பெய்யும் என வானிலை ஆய்வுத் தகவல் கூறுகின்றன. இதனால், தமிழகத்துக்கு வழங்க வேண்டிய நிலுவை நீரையும், செப்டம்பர் மாதத்தின் பங்கையும் கர்நாடகம் வழங்கும் என்றார்.
“தமிழக எதிர்ப்பால் மேக்கேதாட்டு எடுக்கப்படவில்லை’
தமிழகம், புதுச்சேரியின் எதிர்ப்பைத் தொடர்ந்து, மேக்கேதாட்டு அணை விவகாரம் ஆணையக் கூட்டத்தில் எடுத்துக் கொள்ளப்படவில்லை என்று காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் தலைவர் எஸ்.கே. ஹல்தார் தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்துக்குப் பிறகு அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆணையக் கூட்டத்தில் மேக்கேதாட்டு அணை விவகாரத்தை கர்நாடகம் முன்மொழிந்தது. ஆனால் தமிழகம், புதுச்சேரி மாநிலங்கள் இதை எடுத்துக் கொள்ளக் கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்தன. கேரளமும் சட்டரீதியாக இந்த அணை கட்டுவதை ஏற்றுக் கொள்ளவில்லை என்றது. இது நீர்ப்பாசன மாநிலங்களுக்கிடையேயான விவகாரமாகும். அவர்களது “ஒப்புதல்’ இந்த அணைக்குத் தேவை. மேலும், நீதிமன்றத்திலும் வழக்கு இருப்பதால் இந்த விவகாரம் தற்போது ஒத்திவைக்கப்பட்டுள்ளது’ என்றார்.