அதிபர் ஜோ பைடனின் நடவடிக்கை முட்டாள்தனமானது – அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு..!!
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய பின்னர் தலீபான்கள் அங்கு ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றினர். இதனால் ஆப்கானிஸ்தானின் வீழ்ச்சிக்கு அமெரிக்கா தான் காரணம் என மேற்கத்திய நாடுகள் பலவும் அமெரிக்கா மீது அதிருப்தி தெரிவித்தன. அதேபோல் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டிரம்ப் இந்த விவகாரத்தில் அதிபர் ஜோ பைடனை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஆப்கானிஸ்தான் நெருக்கடியை கையாளும் ஜோ பைடனின் நடவடிக்கை முட்டாள்தனமானது என டிரம்ப் சாடியுள்ளார். தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது இதுகுறித்து அவர் கூறியதாவது,
ஆப்கானிஸ்தான் நெருக்கடி நம் நாட்டின் வரலாற்றில் இதுவரை செய்த முட்டாள்தனமான நடவடிக்கையின் விளைவு. தலீபான்களின் கைகளில் சிக்கிய விலை உயர்ந்த ராணுவ உபகரணங்களை அமெரிக்க ராணுவம் அங்கேயே விட்டுவிட்டு வந்துவிட்டது. உண்மையில் இதை நம்புவது கடினம். ஏனென்றால் ஒரு குழந்தை கூட இதைப் புரிந்து கொண்டிருக்கும். நீங்கள் ராணுவத்தை கடைசியாக வெளியேற்றுகிறீர்கள் என்றால், அதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பதை ஒரு குழந்தை கூட அறிந்திருக்கும்.
மிகவும் வருத்தமாக உள்ளது. இது இதுவரை நம் நாட்டுக்கு நடந்திராத மிகவும் சங்கடமான விஷயம். உலகம் முழுவதும் நாம் முட்டாள்களை போல் இருக்கிறோம். நாம் பலவீனமாக இருக்கிறோம். பரிதாபமாக இருக்கிறோம் என்று டிரம்ப் பேசினார்.