திரைத்துறையில் முன்னணி நடிகராக இருப்பவர் ஆர்யா. இவர் மீது ஜெர்மனியில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் சமீபத்தில் புகார் ஒன்றை தெரிவித்தார்.அதில், நடிகர் ஆர்யா தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி பண மோசடி செய்துவிட்டார் என தெரிவித்திருந்தார். இதுகுறித்து சென்னை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தினர். ஆர்யா சைபர் கிரைம் போலீஸில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
விசாரணை அடிப்படையில், முகநூல் மூலம் நடிகர் ஆர்யாவின் பெயரை பயன்படுத்தி ஜெர்மனியில் வசிக்கும் தமிழ் பெண்ணிடம் பணம் மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த 2 பேர் இரு தினங்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக, ஆர்யாவின் வழக்கறிஞர் ஜெரோம் ஜோசப்கோவையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆர்யாமீது எழுந்த புகார் விவகாரத்தில் உண்மையான மோசடி நபர்களை விரைந்து கைது செய்த சென்னை சைபர் கிரைம் போலீஸாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். இந்த குற்றச்சாட்டு எழுந்து, ஆர்யா விசாரணைக்கு சென்றபோது, சமூக வலைதளங்களில் பல அவதூறு கருத்துகள் பரப்பப்பட்டன. குறிப்பாக, ஆர்யா ஜெர்மனி சென்று வந்ததாக ஒரு யூ-டியூப் சேனலில் கூறப்பட்டது. இதனால் அவர் மனதளவில் பாதிக்கப்பட்டார்.
ஆர்யாவின் அலைபேசி எண்ணுக்கும், பாதிக்கப்பட்ட பெண்ணை தொடர்பு கொண்ட எண்ணுக்கும் எந்த தொடர்பும் இல்லை. இந்த விவகாரம் தொடர்பாக ஆர்யா குறித்து சமூக வலைதளங்களில் பலர் அவதூறு கருத்துகளை வெளியிட்டனர். அவ்வாறு சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பிய நபர்கள் மீது தகுந்த சட்டப்படி நடவடிக்கை எடுக்க ஆலோசித்து வருகிறோம் என்றார்.