இந்தியாசெய்திகள்

2024 மக்களவை தேர்தல்தான் நமது இலக்கு; எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயலாற்றும் நேரம் வந்துவிட்டது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அழைப்பு

50views

வரும் 2024-ம் ஆண்டு நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலே நமது இலக்கு. எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து பணியாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தெரிவித்தார்.

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிராக பொதுவான வியூகத்தை வகுப்பது, எதிர்க்கட்சிகளை ஒன்றிணைப்பது போன்ற நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனிடையே, நேற்று மாலைகாணொலி வாயிலான கூட்டத்துக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஏற்பாடு செய்திருந்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பை சோனியா காந்தி விடுத்தார்.

இதற்கான அழைப்பை தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் ஏற்றுக்கொண்டனர். மேலும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் டி.ராஜா உள்ளிட்டோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்பதாக அறிவித்தனர்.

நாடு எதிர்கொண்டு வரும் பல்வேறு முக்கிய விவகாரங்களில் எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கவும், வரவிருக்கும் பேரவைத் தேர்தல்களில் பாஜகவைத் தோற்கடிக்கவும் காங்கிரஸ் மேற்கொண்டு வரும் முயற்சிகளின் அங்கமாகவே இந்தக் கூட்டம் கருதப்பட்டது.

பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒன்று திரட்டும் முயற்சியை முதலில் சரத்பவார் எடுத்தார். அதைத் தொடர்ந்துமேற்கு வங்க முதல்வர் மம்தாபானர்ஜி முயற்சிகளை மேற்கொண்டார். இதற்காக டெல்லி சென்று சோனியா காந்தி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களை மம்தா நேரில்சந்தித்து பேசிவிட்டும் வந்தார்.

இதன்பின்னரே சோனியா காந்தி எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்க முயல இருப்பதாக தகவல்கள் வெளியாயின. ஆனாலும், இந்த தலைவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் போதிய பலன் தரவில்லை என்றே தெரிகிறது. கட்சிகளுக்கு இடையே உள்ள கருத்து வேறுபாடுகள் காரணமாக, எல்லா எதிர்க்கட்சிகளையும் ஒரே கூட்டணியில் இடம்பெறச் செய்வதில் சிக்கல் ஏற்பட்டது.

எனவே எதிர்க்கட்சிகளை காணொலி மூலம் அழைத்துப் பேச சோனியா காந்தி முடிவு செய்தார். இதைத் தொடர்ந்து நேற்று மாலை இந்தக் கூட்டம் நடைபெற்றது.

காணொலி கூட்டத்தில் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சீதாராம் யெச்சூரி உள்ளிட்டோர் இதில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் சோனியா காந்தி பேசியதாவது: 2024-ம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தல்தான் நமது இலக்காக இருக்கவேண்டும். இதற்காக அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைந்து பாஜகவை வீழ்த்தத் தயாராக வேண்டும்.

அனைத்து எதிர்க்கட்சித் தலைவர்களும் ஒன்று சேர்ந்து எழ வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஒன்றிணைந்து பணியாற்றுவதை விட வேறு மாற்று வழி நமக்கு இல்லை. தேசத்தின் நலனுக்காக நாம் ஒன்றிணையவேண்டும்.

சுதந்திர இயக்கத்தின் மதிப்புகளின் மீது நம்பிக்கை வைத்திருக்கும் ஒரே கருத்துடைய கட்சிகள் ஒன்றிணையவேண்டும். நாடு சுதந்திரம் பெற்ற 75-வது ஆண்டு விழா, நமது தனிப்பட்ட மற்றும் கூட்டுத் தீர்மானத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்கு மிகவும் பொருத்தமான சந்தர்ப்பமாக உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்தக் கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் பங்கேற்கவில்லை. மேலும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியை இந்தக் கூட்டத்துக்கு அழைக்கவில்லை. மொத்தம் 19 கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் கூட்டத்தில் பங்கேற்றனர். ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவால், அகாலி தளக் கட்சித் தலைவர்கள் ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கவில்லை.

2024 தேர்தலை மனதில் கொண்டு அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் சோனியா காந்தி அழைப்பு விடுத்திருப்பது அரசியல் அரங்கில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!