செய்திகள்தமிழகம்

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுவிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில் நளினி வழக்கு: விசாரணை தள்ளிவைப்பு

56views

ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி தாக்கல் செய்த வழக்கை நான்கு வாரங்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் கைதிகளாக உள்ள நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகியோரை விடுதலை செய்வது தொடர்பாக கடந்த 2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது.

அந்த தீர்மானத்தின் மீது ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல், தங்களை விடுதலை செய்ய தமிழகஅரசுக்கு உத்தரவிடக் கோரி நளினி, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

அதில், கடந்த 2000-ம் ஆண்டு தனக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்ட பின், 10 ஆண்டுகள் தண்டனை அனுபவித்த 3,800 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அமைச்சரவை தீர்மானத்தின் மீது எந்த நடவடிக்கையும் எடுக் காதது அரசியல் சட்டத்துக்கு விரோதமானது என அறிவிக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை நீதிபதிகள் நான்கு வாரங்களுக்கு தள்ளி வைத்துள்ளனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!