ஓபிசி பிரிவினரை கண்டறிய மீண்டும் மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்கும் மசோதா நிறைவேற்றம்
இதர பிற்படுத்தப்பட்ட வகுப் பினரை (ஓபிசி) கண்டறிந்து பட்டியல் தயாரிக்க மாநில அரசுகளுக்கு மீண்டும் அதி காரம் அளிக்கும் 127-வது சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் மராத்தா சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த மே மாதம் அளித்த தீர்ப்பில், சமூக,பொருளாதார ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதற்கான அதிகாரம் மாநில அரசுகளுக்கு இல்லை என்றும் மத்திய அரசுக்கே அதிகாரம் உள்ளது என்றும் தெரிவித்தது. ஓபிசி சமூகத்தினரை அடையாளம் காணும் உரிமையை மாநில அரசுகளிடம் இருந்து மத்திய அரசு பறித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. இதையடுத்து, ஓபிசி பிரிவினரை அடையாளம் காணும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு மீண்டும் வழங்கும் வகையில் மசோதா தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு மத்திய அமைச்சரவையும் கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில், ஓபிசி பிரிவினரை தாங்களே அடையாளம் கண்டு பட்டியல் தயாரிக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கும் அரசியல் சாசனத்தின் 127வது திருத்த மசோதா மக்களவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், எதிர்க்கட்சிகளின் ஆதரவுடன் மசோதா நிறைவேற்றப்பட்டது. பழங்குடியினர் பட்டியலை மாற்றியமைக்கும் அனுமதியை நாடாளுமன்றத்துக்கு வழங்கவும் இம்மசோதா வகை செய்கிறது.
முன்னதாக, மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டம் நடந்தது.
இக்கூட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி, திமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்டனர். பின்னர் மல்லிகார்ஜூன கார்கே கூறுகையில், ”ஓபிசி பிரிவினரைக் கண்டறிய மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சாசன திருத்த மசோதாவுக்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கும். மசோதா நிறைவேற ஒத்துழைப்பு அளிப் போம்” என்று தெரிவித்தார்.