தமிழகத்தில் 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது.
காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் இருந்தது. செப். 15-ம் தேதிக்குள் தேர்தலை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்நிலையில், மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் 9 மாவட்டங்களுக்கான தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, 9 மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்குப்பதிவு அக். 6, 9-ம் தேதிகளில் 2 கட்டங்களாக நடக்க உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்குகிறது. இன்று காலை 10 முதல்மாலை 5 மணி வரை மனுக்கள் பெறப்படும். மனுக்களை தாக்கல்செய்ய வரும் 22-ம் தேதிகடைசி நாளாகும். மனுக்களை வரும் 25-ம் தேதி வரை திரும்பப் பெறலாம். அன்று மாலை வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும்.
வேட்பாளர்களுக்கான வைப்புத் தொகையைப் பொருத்தவரை, பொது வேட்பாளர்கள் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.200, ஊராட்சித் தலைவர்,ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.600, மாவட்டஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு ரூ.1,000 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர் வகுப்பைச் சேர்ந்த வேட்பாளர்கள் இதில் 50 சதவீதம் செலுத்தினால் போதுமானது.
மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர்பதவிகளுக்கான வேட்புமனுக்களை வட்டார வளர்ச்சி அலுவலகங்களில் பெற்று, பூர்த்தி செய்து சமர்ப்பிக்க வேண்டும்.
வார்டு உறுப்பினர் பதவிக்கான வேட்புமனுக்களை அந்தந்த ஊராட்சி அலுவலகங்களிலேயே பெற்று, பூர்த்தி செய்து அளிக்கலாம்.