தமிழகம்

9 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

225views

தெற்கு அந்தமான் கடற்பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக கோவை, திருச்சி உள்ளிட்ட 9 மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி, கோவை, கிருஷ்ணகிரி, ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், கடலூர், கரூர், திருச்சி, புதுக்கோட்டை மற்றும் டெல்டா மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் எஞ்சிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதுடன், நகரின் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.

மேலும், 24 மற்றும் 25-ம் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் கணித்துள்ளது.

இதனிடையே, சென்னையில் கோயம்பேடு, வடபழனி, நுங்கம்பாக்கம், வள்ளூவர் கோட்டம் உள்ளிட்ட பகுதிகளில் இரவில் விட்டுவிட்டு மழை பெய்தது. அத்துடன், புறநகர் பகுதிகளிலும் அதிகாலை 3 மணியில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது.

கடந்த இரு நாட்களாக மழை அளவு குறைந்த நிலையில், தாழ்வான பகுதிகளில் தேங்கிய நீர் வடியத் தொடங்கியது. இந்நிலையில், மீண்டும் மழை பெய்யத் தொடங்கியதால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!