விமான சேவையானது 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் கொழும்பில் உள்ள விமான நிலையத்தில் தொடங்கப்படவுள்ளது.
இலங்கையிலுள்ள கொழும்பில் இரத்மலான விமான நிலையம் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தில் 50 வருடங்களுக்கு பிறகு மீண்டும் சர்வதேச விமான சேவைகள் தொடங்கப்பட உள்ளன. அதிலும் முதல் விமானமானது அடுத்தமாதம் மாலத்தீவுக்கு புறப்படவுள்ளது. இதனை இலங்கையின் சுற்றுலா அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மாலத்தீவு ஏர்லைன்ஸ் உடன் நடத்தப்பட்ட நீண்டநேர பேச்சுவார்த்தைக்குப் பின்னர் இரத்மலானவில் இருந்து விமானங்களை இயக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
இருப்பினும் 50 பயணிகளை மட்டுமே பயணிக்கக்கூடிய விமானமானது கொழும்பிலிருந்து மாலத்தீவுக்கு செல்லும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விமான நிலையமானது 1938 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 1968 ஆம் ஆண்டு கட்டுநாயக்க சர்வதேச விமானநிலையத்திலிருந்து போக்குவரத்து துவங்கப்பட்டதால் இரத்மலானவின் சேவைகள் நிறுத்தப்பட்டன.
ஆனால் தற்பொழுது தொடங்கப்படவுள்ள விமான நிலையமானது இந்தியா மற்றும் மாலத்தீவை மையமாகக் கொண்ட ஒரு பிராந்திய சர்வதேச விமான நிலையமாக உருவாகும். மேலும் இரத்மலான விமான நிலையத்தில் சர்வதேச விமான சேவைகளை அதிகரிப்பதற்காக விமானம் நிறுத்துமிடத்திற்கான கட்டணத்தை ஒரு வருடத்திற்கு தள்ளுபடி செய்யவும் பயணிகளிடம் இருந்து வசூலிக்கப்படும் விமான நிலைய சேவை வரிகளை அகற்றவும் இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.