தமிழகம்

4 ஆயிரம் மெகாவாட் சூரிய ஒளி மின்திட்டம் விரைவில் தொடக்கம்: மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்

45views

“தமிழகத்தில் 4 ஆயிரம் மெகாவாட் சூரியஒளி மின்திட்டம் விரைவில் தொடங்கப்படும்’ என்று, மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

திருநெல்வேலி மின்பகிர்மான வட்டத்தில் திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் வளர்ச்சி திட்டம் குறித்த கலந்தாய்வு கூட்டம் பெருமாள்புரம் சாராள் தக்கர் கல்லூரியில் நடைபெற்றது. அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு மின்வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி, ஞானதிரவியம் எம்பி, எம்எல்ஏக்கள் அப்துல் வகாப், ரூபி மனோகரன், பழனி நாடார் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழகத்தில் சட்டப்பேரவையில் நடைபெற்று முடிந்த மானிய கோரிக்கையில் இதுவரை இல்லாத அளவுக்கு பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழக வரலாற்றில் ஒரே ஆண்டில் 1 லட்சம் விவ்சாயிகளுக்கு மின் இணைப்பு கொடுக்கக் கூடிய வரலாற்று முக்கியத்துவமான அறிவிப்பை வெளியிட்டிருக்கிறோம். இதுவரை 4,52,777 விவசாயிகள் 18 ஆண்டுகள் வரை பதிவு செய்து மின் இணைப்புக்காக காத்திருக்கிறார்கள். கடந்த ஆட்சியில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டுள்ளனர்.

சூரிய மின்சக்தியை பயன்படுத்தி மின் உற்பத்தியை அதிகரிக்க செய்ய வேண்டும் என்பதற்காக, 20 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் சக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதிகொடுக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இந்த ஆண்டு 4 ஆயிரம் மெகாவாட் சூரிய மின் உற்பத்தி செய்யப்படும். தமிழக சட்டப்பேரவை கூட்டம் முடிந்த பின்பு எந்தெந்த மாவட்டங்களில் இடங்கள் சாத்தியப்படும் என்பதை பொறுத்து இத்திட்டத்தைத் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

மின்வாரியத்தில் மொத்தம் உள்ள 1,46,000 பணியிடங்களில் 56,000 பணியிடங்கள் காலியாக உள்ளன. முதலில் களப்பணியாளர்களை நியமிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். விரைவில் காலியிடங் கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 5 ஆண்டுகளில் மின்துறை செயல்பட்டதா என்ற கேள்விக்குறி எழுகிறது. நிலக்கரியை பொறுத்தவரை வடசென்னை அனல்மின் நிலையத்தில் 2 லட்சத்து 38 ஆயிரம் டன், தூத்துக்குடியில் 71 ஆயிரம் டன் காணாமல் போனது முதல்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. நிலக்கரி இருப்பு மாயமானது தொடர்பாக விசாரணை இறுதி அறிக்கை வந்த பிறகு நடவடிக்கை எடுக்கப்படும். மின்சாரத் துறை தொடர்பான புகார் தெரிவிப்பதற்கான வழிமுறைகள் எளிமைப்படுத்தப்பட்டு 97 சதவீதம் புகார்கள் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளன. நவீன மீட்டர் திட்டம் குறித்து அறிவித்துள்ளோம். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும 4-வது உலையில் உற்பத்தி செய்யப்படும் 2,000 மெகாவாட் மின்சாரத்தை தமிழகத்துக்கு ஒதுக்குவது தொடர்பாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் முடிந்த பிறகு தெரிவிக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.

முன்னதாக மேலப்பாளையம் துணைமின் நிலையத்தில் கூடுதல் மின்மாற்றியை அமைச்சர் தொடங்கி வைத்தார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!