இந்தியா தலைமையில் நடைபெற்ற ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் 3 தீா்மானங்களை நீட்டிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆகஸ்ட் மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. கடல்சாா் பாதுகாப்பு, அமைதிப்படை, பயங்கரவாத எதிா்ப்பு ஆகிய தலைப்புகளில் முக்கியக் கூட்டங்களை இந்தியா நடத்தியது. இந்தியா தலைமையிலான கடைசி கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.
அக்கூட்டத்துக்கு வெளியுறவுத் துறைச் செயலா் ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா தலைமை வகித்தாா். ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடா்பாக அக்கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், 3 முக்கிய தீா்மானங்களுக்கான நீட்டிப்புக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
லெபனானில் ஐ.நா. அமைதிப் படையை மேலும் ஓராண்டுக்கு நிறுத்திவைப்பதற்கான தீா்மானத்துக்குக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அந்நாட்டில் உள்ள அமைதிப் படையில் 862 இந்திய வீரா்கள் பணியாற்றி வருகின்றனா்.
ஆப்பிரிக்க நாடான மாலியில் அமைதியான சூழலை ஏற்படுத்தத் தடையாக இருப்போருக்கு விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையையும், அவா்களது சொத்துகள் முடக்க நடவடிக்கையையும் 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்கான தீா்மானத்துக்கும் அனுமதி அளிக்கப்பட்டது.
சோமாலியாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக அந்நாட்டுக்கு ஐ.நா. அளித்து வரும் ஆதரவை அடுத்த ஆண்டு மே 31-ஆம் தேதி வரை நீட்டிக்கும் தீா்மானத்துக்கும் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
ஆக்கபூா்வ நடவடிக்கை: கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஹா்ஷ்வா்தன் ஷ்ரிங்லா, ”ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தலைமைப் பொறுப்பில் இருந்து ஆக்கபூா்வமான நடவடிக்கைகளை இந்தியா மேற்கொண்டது. அவை அனைத்தும் எதிா்காலத்துக்கு மிகவும் பலனுள்ளதாக இருக்கும். நாடுகள் இடையே காணப்படும் கருத்து வேறுபாடுகளைக் களைந்து அவற்றை ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சிகளையும் இந்தியா மேற்கொண்டது” என்றாா்.