இந்திய கடற்படை துணைத் தளபதி சதீஷ் நாம்தேவ் கோர்மடே டெல்லியில் நேற்று முன்தினம் நிருபர்களிடம் கூறியதாவது:
இந்திய கடற்படையில் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள் உட்பட130 கப்பல்கள் உள்ளன.
உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் வரும் 21-ம் தேதியும் கல்வாரி பிரிவைச் சேர்ந்த ஐஎன்எஸ் வேலா நீர்மூழ்கி வரும் 25-ம் தேதியும் கடற்படையில் இணைக்கப்பட உள்ளன. வரும் 2027-ம் ஆண்டுக்குள் இந்திய கடற்படையில் போர்க்கப்பல்களின் எண்ணிக்கையை 170 ஆக உயர்த்தஏற்கெனவே இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. திட்டமிட்டபடி இந்த இலக்கை எட்ட தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விமானந்தாங்கி போர்க்கப்பல், நீர்மூழ்கிகள், ரோந்து விமானங்கள் என சமபலத்துடன் கடற்படையை வலுவாக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது போர்க்கப்பல்,நீர்மூழ்கிகள் என 39 கப்பல்கள்கட்டப்பட்டு வருகின்றன. கடற்படையை மேம்படுத்த 15 ஆண்டு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு கோர்மடே தெரிவித்தார்.
ஐஎன்எஸ் விசாகப்பட்டினம், ஏவுகணை அழிப்பு போர்க்கப்பல் ஆகும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்டுள்ள இந்தக் கப்பலில் வானில் உள்ள இலக்குகளை தாக்கிஅழிக்கும் ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளன.