தமிழகம்

16 ஆண்டுகளுக்குப் பிறகு திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் இன்று குடமுழுக்கு

52views

கும்பகோணம் அருகே உள்ள திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோயிலில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (அக். 24) குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது.

கும்பகோணம் அருகே திருநாகேஸ்வரத்தில் நாகநாத சுவாமி கோயில் உள்ளது. நவக்கிரகங்களில் முக்கியமாக திகழும் ராகு பகவான் தனது இரு மனைவிகளுடன் மங்கள ராகுவாக இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார். இக்கோயில் ராகு தோஷ பரிகாரத் தலமாகவும் விளங்குகிறது. மேலும், ராகு கால பூஜையின்போது ராகுபகவானின் சிலைக்கு பாலாபிஷேகம் செய்யும்போது, அந்த பால் நீலநிறமாக மாறி வருவது இன்றளவும் காணப்படுகிறது.

இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு முன்பு குடமுழுக்கு நடத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து, தற்போது குடமுழுக்கு நடத்த முடிவு செய்யப்பட்டு, உபயதாரர்கள் உதவியுடன் ரூ.5 கோடி செலவில் 7 ராஜகோபுரங்கள், 13 பரிவார தெய்வ விமானங்களுக்கு திருப்பணிகள் செய்யப்பட்டன.

இதையடுத்து, கோயில் குடமுழுக்கு விழா கடந்த 18-ம் தேதிமாலை கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. இதற்காக, பிரம்மாண்ட யாகசாலை பந்தலில் 37 வேதிகைகளும், 108 குண்டங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 250 சிவாச்சாரியார்கள், 40 ஓதுவார்கள் பங்கேற்று, யாகசாலை பூஜைகளை நடத்தி வருகின்றனர். குடமுழுக்கைஒட்டி 4 மற்றும் 5-ம் கால யாகசாலை பூஜைகள் நேற்று நடைபெற்றன. இதில், உயர் நீதிமன்ற நீதிபதி மகாதேவன், பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் இரா.காமராஜ், உபயதாரர் கோவை ராம.சேரலாதன், கோவை கற்பகம் பல்கலைக்கழக ஜோதிடவியல் துறைத் தலைவர் டாக்டர் கே.பி.வித்யாதரன், முன்னாள் எம்எல்ஏ ராம.ராமநாதன், வேளாக்குறிச்சி ஆதினம் சத்தியஞானமகாதேவ தேசிக சுவாமிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்ந்து, ஆறு கால யாகசாலை பூஜைகள் நிறைவுபெற்று, இன்று (அக்.24) குடமுழுக்கு நடைபெறுகிறது. நாகநாத சுவாமி கோயிலில் உள்ள 13 பரிவார தெய்வ விமானங்களுக்கு இன்று காலை 7 மணிக்கும், 7 ராஜகோபுரங்களுக்கு காலை 10.30 மணிக்கும் குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. பக்தர்கள்சமூக இடைவெளி உள்ளிட்ட கரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்க கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி, கோயிலில் பக்தர்கள் மேலவாசல் பகுதியில் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளனர். 500 போலீஸார் கோயிலில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழாவில் மக்கள் பிரதிநிதிகள், அறநிலையத் துறை அதிகாரிகள், உபயதாரர்கள் பலர் கலந்துகொள்கின்றனர். அறநிலையத் துறையினருடன் மாவட்ட நிர்வாகம் இணைந்துவிழாவுக்கான ஏற்பாடுகளை செய்து வருகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!