ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் பங்கேற்ற இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான முதல் ஒரு நாள் போட்டி அகமதாபாத்தில் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனையடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 43.5 ஓவர்களில் 176 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதில் நிதானமாக விளையாடிய ஹோல்டர் அரை சதம் அடித்தார்.
இந்திய அணி சார்பில் அபாரமாக பந்து வீசிய சஹால் 4 விக்கெட்டுகளையும், வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினார். இதையடுத்து, களமிறங்கிய இந்திய அணியில், கேப்டன் ரோஹித் ஷர்மா 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். இந்திய வீரர்களின் அதிரடி ஆட்டத்தால், 21 புள்ளி 5 ஓவர்களில், இந்திய அணி வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம், ஆயிரமாவது ஒருநாள் போட்டியில் விளையாடிய இந்திய அணி, 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில், 8 ரன்களை எடுத்த விராட் கோலி, ஒரு நாட்டில் நடைபெற்ற போட்டிகளில் 5 ஆயிரம் ரன்களை கடந்த 4-வது வீரர் என்ற சாதனையை படைத்தார். சச்சின் டெண்டுலகர், ரிக்கி பாண்டிங் மற்றும் காலிஸை தொடர்ந்து, விராட் கோலி இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளார்.