ஸ்பெயின் நாட்டில் லா-நுசியா சர்வதேச ஓபன் 2021 செஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. அக்.5ம் தேதி தொடங்கிய இந்த போட்டியில் இந்தியா, ஸ்பெயின், ரஷ்யா, உக்ரைன் உட்பட 14 நாடுகளை சேர்ந்த 88 வீரர்கள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் தமிழக வீரர் கிராண்ட் மாஸ்டர் ப.இனியன் பங்கேற்றார்.
கோவை கல்லூரி மாணவரான இனியன் மொத்தம் 9 சுற்றுகளாக நடந்த ஆட்டத்தில் 6 சுற்றுகளில் வெற்றியும், 2 சுற்றுகளில் டிராவும் செய்து 7 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஏற்கனவே ஒப்புக் கொண்ட ஆன்லைன் செஸ் போட்டியில் பங்கேற்க வேண்டியிருந்ததால் ஒரு சுற்றில் (8வது) இனியன் விளையாடாதது குறிப்பிடத்தக்கது. இந்த தொடரில் சிலியைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ரோட்ரிகோ வாஸ்சியூஸ் 2வது இடமும், உக்ரைனைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் ஆண்ட்ரே ஸ்மித் 3வது இடமும் பிடித்தனர். முன்னதாக நடந்த சுற்றுகளில் இஸ்ரேல், சிலி, ஸ்பெயின், கியூபா என சர்வதேச முன்னணி கிராண்ட் மாஸ்டர்களை இனியன் வீழ்த்தினார்.