செய்திகள்தமிழகம்

வேலூர் மலை கோட்டையில் கண்டெடுக்கப்பட்ட பிரிட்டீஷ் அரசாங்க முத்திரையுடன் கூடிய பீரங்கி: அரசு அருங்காட்சியகத்துக்கு கொண்டு வர ஆலோசனை

162views

வேலூர் மலை கோட்டையில் பிரிட்டீஷ் அரசாங்க முத்திரையுடன் கிடைத்துள்ள பீரங்கியை மீட்டு பாதுகாப்பது குறித்து அரசு அருங் காட்சிய காப்பாட்சியர் சரவணன் விரைவில் மாவட்ட ஆட்சியரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளார்.

வேலூர் பாலாற்றில் இருந்து சுமார் ஒரு கி.மீ தொலைவில் உள்ள மலை கோட்டை 16-ம் நூற்றாண்டில் விஜயநகர பேரரசு கட்டுப்பாட்டில் இயங்கிய பொம்மு ரெட்டி, திம்ம ரெட்டி ஆகியோரால் கட்டப்பட்டது. வரலாற்று சிறப்பு மிக்க பல போர்களை கண்டுள்ள வேலூர் கோட்டை அகழியுடன் அமைந்திருப்பது ராணுவ ரீதியாக சிறப்பு மிக்க கோட்டையாக இருந்து வருகிறது. வேலூர் கோட்டை பிஜப்பூர் சுல்தான்கள், மராட் டியர்கள், முகலாயர்கள், ஆற்காடு நவாபுகள், ஆங்கிலேயர்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது.

பொது ஆண்டு 1,688 வாக்கில் மராட்டிய படையினர் 14 மாதங்கள் முற்றுகைக்குப் பிறகு வேலூர் கோட்டையை கைப்பற்றினர். ஏறக்குறைய 20 ஆண்டுகள் மராட்டியர்களின் கட்டுப்பாட்டில் வேலூர் கோட்டை இருந்தபோது அதை பாதுகாக்க நகரின் கிழக்குப்பகுதியில் உள்ள மலைகளில் ‘சஜாரா, கோஜிரா’ என்ற இரண்டு கோட்டைகளை எழுப்பினர். ராணுவ சிறப்பு வாய்ந்த கோட்டையை ஆங்கிலேயர்கள் ஆட்சிக்காலத்திலும் பலப்படுத்தி பாதுகாத்து வந்துள்ளனர். தற்போது, பாழடைந்து பாரா மரிப்பு இல்லாமல் இருக்கும் இந்த கோட்டை பகுதி சமூக விரோதி களின் நடமாட்டம் நிறைந்த பகுதியாக உள்ளது. வேலூர் மலைக் கோட்டை பகுதியில் மண்ணில் புதைந்த பீரங்கி ஒன்றை பொது மக்கள் கண்டெடுத்த நிலையில் அதை ஆய்வு செய்வதற்காக வேலூர் அரசு அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் நேற்று நேரில் சென்றார்.

மண்ணில் புதைந்துள்ள பீரங்கி எவ்வித சேதமும் இல்லாமல் சுமார் 9 அடி நீளமும், 15 செ.மீ விட்டமும் கொண்டதாக உள்ளது. பீரங்கியின் ஒரு பகுதியில் பிரிட்டீஷ் அரசாங்க முத்திரை பொறிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் இதுவரை ஆங்கிலேயர்கள் பயன்படுத்திய 7 பீரங்கிகள் கிடைத்துள்ளன. இதில், இரண்டு பீரங்கிகள் வேலூர் மாவட்ட ஆட்சியர் பங்களா நுழைவு வாயில் பகுதியிலும், இரண்டு பீரங்கிகள் கோட்டையில் உள்ள அரசு அருங்காட்சியகம் வசமும், 3 பீரங்கிகள் மத்திய தொல்லியல் துறை அருங்காட்சியகம் வசமும் பாதுகாக்கப்பட்டு வருகிறது.

வேலூர் மலை கோட்டையில் கிடைத்திருப்பது 8-வது பீரங்கி என்பதுடன் இதுவரை கிடைத்துள்ள பீரங்கிகளில் இதுதான் பெரியதும் அதிக நீளமும் கொண்டதும் ஆகும். மேலும், பிரிட்டீஷ் அரசாங்க முத்திரையுடன் கிடைக் கப்பெற்ற பீரங்கியும் இதுதான் என கூறப்படுகிறது. இந்த வகை பீரங்கியால் மலையின் மீதிருந்து அதிக தொலைவில் இருக்கும் எதிரிப்படைகளை சுலபமாக தாக்க முடியும் என கூறப்படுகிறது. ஏறக்குறைய 300 ஆண்டுகள் பழமையான பீரங்கி என கூறப்படுகிறது.

இதுகுறித்து அரசு அருங் காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறும்போது, ”இந்த பீரங்கி சுமார் 2 முதல் 3 டன் எடை கொண்டதாக உள்ளது. இதை மலையில் இருந்து கீழே எடுத்துவரும் சாத்தியக்கூறுகள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. ஒரு வேளை எடுத்துவர முடியாது என்றால், அங்கேயே அதை பாதுகாப்பாக வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். பீரங்கியின் விவரம் குறித்து மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும். அதன் பிறகு அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ராணுவ ரீதியில் சிறப்பு வாய்ந்த மலை கோட்டையை சுற்றுலாத்தலமாக்க வேண்டும் என்பதுடன் இருக்கின்ற கோட்டையின் சிதிலமடைந்த பகுதிகளை பாதுகாக்க வேண்டும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!