இந்தியா

விவசாயிகள் தொடர் போராட்டத்தால் மக்களுக்கு பாதிப்பு; 4 மாநில அரசுகள் பதில் அளிக்க வேண்டும்: தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

50views

விவசாயிகளின் போராட்டத்தால் தொழில் துறை, பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக ஏராளமான புகார்கள் வந்துள்ளன. இதுகுறித்து பதில் அளிக்குமாறு 4 மாநில அரசுகளுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த ஆண்டு நவம்பர் முதல் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதுதொடர்பாக டெல்லி, ஹரியாணா, உத்தர பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அந்த நோட்டீஸில் கூறியிருப்பதாவது:

விவசாயிகளின் போராட்டம் தொடர்பாக ஆணையத்துக்கு ஏராளமான புகார்கள் வந்துள்ளன. சுமார் 9,000-க்கும் மேற்பட்ட குறு, சிறு, நடுத்தர, பெரிய தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் பொதுமக்களுக்கு கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்துள்ளன. குறிப்பாக போக்குவரத்து முடங்கியுள்ளது. நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

போராடுவதற்கு அனைவருக்கும் உரிமை உள்ளது. அதேநேரம் பொதுமக்களின் அடிப்படை உரிமைகளையும் கவனத்தில் கொள்ள வேண்டும். யாருக்கும் இடையூறு இல்லாமல் அமைதியாக போராட்டம் நடத்தப்பட வேண்டியது அவசியம். இதை தலைமைச் செயலாளர்கள், காவல் துறை தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும். விவசாயிகள் போராட்டம் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கரோனா காலத்தில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்ட களத்தில் கரோனாதடுப்பு விதிகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா? போராட்டத் தால் வைரஸ் பரவல் அதிகரித் திருக்கிறதா என்பது குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யுமாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம், மத்திய உள்துறை, மத்திய சுகாதாரத் துறையிடம் தேசிய மனித உரிமைகள் ஆணையம் கேட்டுக் கொண்டுள்ளது.

விவசாயிகள் போராட்டத்தால் தொழில் துறை எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு இழப்பு ஏற்பட்டிருக்கிறது என்பது குறித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பொருளாதார வளர்ச்சி கழகத்தை (ஐஇஜி) ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

விவசாயிகளின் போராட்டத்தால் மக்களின் வாழ்வாதாரம் எந்த அளவுக்கு பாதிக்கப்பட்டிருக்கிறது, பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் என்னென்ன பிரச்சினைகள் எழுகின்றன என்பது குறித்து அறிக்கை அளிக்குமாறு டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி சமூக சேவை அமைப்புக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!