தமிழகம்

விரைவில் வெளியாகிறது தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை: உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தகவல்

79views

தமிழகத்துக்கான மாநில கல்விக்கொள்கை விரைவில் வெளியாகும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி தெரிவித்துள்ளார்.

சென்னை மாநிலக் கல்லூரியில் ஜப்பானைச் சேர்ந்த தாவரவியலாளர் அகிரா மியாவாக்கியின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, 1,000 பழங்குடி மர இனங்களின் கன்றுகளை நடும் விழா நேற்று நடைபெற்றது. கிண்டி ரோட்டரி கிளப் மற்றும் எக்ஸ்னோரா அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்ச்சியில் உயர்கல்வித் துறை அமைச்சர் க.பொன்முடி கலந்து கொண்டு மரக்கன்றை நட்டார்.

அப்போது மாணவர்களிடையே அவர் பேசியதாவது: மாநிலக் கல்லூரியில் இடம் கிடைக்காதா என நான் ஏங்கியது உண்டு. இந்திய அளவில் சிறப்புமிக்க கல்லூரியில் சேர்ந்து படிப்பதற்கும், பணியாற்றுவதற்கும் பலரும் ஆர்வமாக உள்ளனர். கல்வியைத் தாண்டி விளையாட்டு, சமூகப் பணிகளில் மாணவர்கள் ஈடுபட வேண்டும்.

கல்லூரியில் தற்போது 1,000 மரக்கன்றுகள் நடப்படவுள்ளன. ஆனால், இங்குப் படிக்கும் 5 ஆயிரம் மாணவர்கள், ஒவ்வொருவரும் ஒரு மரம் நட்டால் கல்லூரி மொத்தமும் அழகிய வனமாகிவிடும்.

தமிழகம் இருமொழிக் கொள்கையைக் கொண்டுள்ளது. தமிழ்பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, மாணவர்கள்ஆங்கிலத்துடன் தமிழ்மொழியையும் நன்றாகப் படிக்கவேண்டும். அப்போதுதான் வேலைவாய்ப்பை முழுமையாகப் பெற முடியும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது, ‘தமிழகத்துக்கான மாநில கல்விக் கொள்கை வகுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதற்கான குழு அமைக்கப்பட்டு விரைவில் அறிவிப்பு வெளியிடப் படும்’ என்றார்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி கல்வி இணை இயக்குநர் ராவணன், கல்லூரி முதல்வர் ராமன், கிண்டி ரோட்டரி கிளப் தலைவர் மோதிஷ், எக்ஸ்னோரா தலைமை நிர்வாக அதிகாரி செந்தூர் பாரி, பேராசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!