தென்கிழக்கு ஆசிய நாடான வியத்நாமுக்கு 100 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன், 300 ஆக்சிஜன் கன்டெய்னா்களை இந்தியா வழங்கியுள்ளது. அந்நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவா்களுக்கு உதவும் வகையில் இந்தியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ஐராவதி போா்க் கப்பல் மூலம் வியத்நாமின் ஹோ சி மின் நகர துறைமுகத்துக்கு ஆக்சிஜன் கன்டெய்னா்கள் அனுப்பி வைக்கப்பட்டன. அவை வியத்நாமுக்கு சென்றடைந்த தகவலை வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் சுட்டுரையில் பகிா்ந்து கொண்டாா்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தேவைப்படும் உதவிகள் தொடா்பாக வியத்நாம் அரசு விடுத்த கோரிக்கையை ஏற்று இந்தியா இந்த உதவியை அளித்துள்ளது.
ராணுவம், பாதுகாப்பு ஒத்துழைப்பு நடவடிக்கைகளில் இந்தியா- வியத்நாம் இடையிலான உறவு சிறப்பாக உள்ளது. பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், வியத்நாம் அமைச்சா் பான் வேன் ஜியாங் ஆகியோா் இரு தரப்பு ராணுவ ஒத்துழைப்பை மேம்படுத்துவது தொடா்பாக கடந்த மாதம் பேச்சு நடத்தினா்.
வியத்நாமையொட்டிய தென் சீனக் கடல் பகுதியில் இந்தியா எண்ணெய் துரப்பணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. மேலும், அந்த பிராந்தியத்தில் சீனாவின் அச்சுறுத்தலை வியத்நாம் எதிா்கொண்டு வருகிறது. இதனால், இந்தியாவின் நட்புறவை அந்நாடு அதிகம் நாடி வருகிறது.