விமான பயணிகளுக்கான ஆர்டிபிசிஆர் சோதனை; முடிவை 3 மணி நேரத்தில் அறியலாம்: விமான நிலைய இயக்குநர் சரத்குமார் தகவல்
விமானப் பயணிகளுக்கான ஆர்டிபிசிஆர் சோதனை முடிவு,3 மணி நேரத்துக்குள் தெரியும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னை விமான நிலைய ஆணையக இயக்குநர் சரத்குமார் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது:
ஒமைக்ரான் பாதித்த நாடுகளில் இருந்து வரும் பன்னாட்டு பயணிகளுக்கு பல்வேறு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. ஒரே நேரத்தில் 700 பேர் வரை சமூக இடைவெளியுடன் அமரக் கூடிய இருக்கைகள் போடப்பட்டுள்ளன. பாதிப்பு அதிகம் உள்ள நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகளுக்கு ராபிட் சோதனை செய்ய கட்டணம் ரூ.3,400-ல் இருந்து ரூ.2,900 ஆககுறைக்கப்பட்டுள்ளது.
இதேபோல ஆர்டிபிசிஆர் சோதனை கட்டணம் ரூ.600 ஆககுறைக்கப்பட்டுள்ளது. ராபிட் சோதனை முடிவு 45 நிமிடத்தில் இருந்து 30 நிமிடமாக குறைக்கப்பட்டுள்ளது. அதுபோல், ஆர்டிபிசிஆர் சோதனை நேர முடிவு 6 மணி நேரத்தில் இருந்து 3 மணி நேரமாககுறைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1-ம் தேதியில் இருந்துஒமைக்ரான் அதிகம் பாதித்த நாடுகளில் இருந்து வந்த 5,816 பேருக்குசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் ஒமைக்ரான் தொற்று உறுதியாகவில்லை. ஒமைக்ரான் அதிகம் பாதித்த நாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு சோதனை கட்டாயம் என்ற பட்டியலில் இருந்து சிங்கப்பூர் நீக்கப்பட்டுள்ளது.
டெல்டா வைரஸை விட ஒமைக்ரான் வைரஸ் அதிக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதால் பன்னாட்டு பயணிகளிடம் அதிக கவனம் செலுத்தப்படுகிறது. மேலும் விமான நிலையத்துக்கு, அதிகம்பாதித்த நாடுகளில் இருந்து வரக்கூடிய பயணிகள் பரிசோதனை நேரம் மற்றும் கட்டணங்களை ஆன்லைனில் செலுத்தி வசதி பெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய விரிவாக்க பணிகள் முடிந்த பின் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.