இந்தியா முழுவதும் உள்ளூர் பயணங்களின் போது சீக்கியர்களுக்கு கத்தி எடுத்து செல்ல இந்திய பாதுகாப்பு அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.
இந்திய விமானங்களில் பயணிக்கும் பொழுது இனி சீக்கியர்களுக்கு கத்தியை எடுத்து செல்ல அனுமதிக்கப்படுகிறது என்று மத்திய விமான போக்குவரத்து பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது.
இந்தியாவில் டர்பன் அணிதலும், குறுவாள் வைத்திருப்பதும் சீக்கியர்களின் பாரம்பரியமாக கருதப்படுகிறது. உலகளவில் விமானத்தில் பயணிகள், எந்தவிதமான கூர்மையான ஆயுதங்களையும் எடுத்து செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. சக பயணிகளின் பாதுகாப்பு மற்றும் விமான கடத்தலை தடுக்க விமானங்களில் இது போன்று கூர்மையான ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கு மத்திய அரசும் தடை விதித்திருந்தது.
இந்நிலையில், தற்போது கட்டுப்பாடுகளுடன் சீக்கியர்கள் கிர்பான் எனப்படும் கத்தியை எடுத்து செல்லலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. விமானங்களில் எடுத்துச் செல்லப்படும் கத்தி 22.86 செ.மீ., அதாவது 9 இன்ச்சுக்கு அதிகமாக இருக்க கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்திய அனுமதி இந்திய விமானங்களில், உள்ளூர் பயணங்களின் பொழுது மட்டுமே வழங்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிளேடு எனப்படும் கத்தியின் கூர்மையான பகுதி 15.24 செ.மீ. அதாவது 6 இன்ச்சுக்கு மேல் இருக்க கூடாது என்று மத்திய விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது.