தமிழகம்

விநாயகர் சதுர்த்தி : பொது இடங்களில் சிலைகள் வைக்க தடை

49views

கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக, பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படி கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பொது இடங்களில் சிலைகள் வைப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. வரும் பண்டிகை காலங்களில் எச்சரிக்கையாக இருக்கும்படியும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றும்படியும் மத்திய அரசும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து பண்டிகை காலத்தை முன்னிட்டு கொரோனா தடுப்பு நடவடிக்கையை தமிழக அரசு தீவிரப்படுத்தியுள்ளது.

இந்நிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், விநாயகர் சதுர்த்தியை ஒட்டி பொது இடங்களில் விழா கொண்டாடுவதற்கும் சிலைகள் வைப்பதற்கும் அனுமதியில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிலைகளை ஊர்வலமாக எடுத்து செல்லவும், சிலைகளை நீர்நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதி இல்லை என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

இருந்த போதிலும் தனிநபர்கள் தங்களது வீடுகளில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபடவும், தனிநபர்களாக சென்று அருகில் உள்ள நீர்நிலைகளில் சிலைகளை கரைப்பதற்கும் அனுமதிக்கப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், சென்னையில் சந்தோம் முதல் நேப்பியர் பாலம் வரையிலான வழித்தடத்தில் விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் சிலை கரைப்பு செயல்பாட்டிற்கு தடை விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்கள் இல்லங்களில் வைத்து வழிபாடு நடத்திய சிலைகளை ஆலயங்களின் வெளிப்புறத்திலோ சுற்றுப்புறத்திலோ வைத்து செல்வதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது என்றும், அவற்றை இந்து சமய அறநிலையத்துறை முறையாக அகற்ற நடவடிக்கை எடுக்கும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!