சினிமாசெய்திகள்

வித்யாபாலன் நடிப்பில், அமித் மஸூர்கர் இயக்கியிருக்கும் ஷெர்னி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது.

70views

வித்யாபாலன் நடிப்பில், அமித் மஸூர்கர் இயக்கியிருக்கும் ஷெர்னி அமேசான் பிரைமில் நேரடியாக வெளியாகியுள்ளது. அமித் மஸூர்கர் விமர்சனரீதியாக பாராட்டப்பட்ட நியூட்டன் படத்தின் இயக்குனர். அவர் வித்யாபாலனை வைத்து வனவிலங்குப் பின்னணியில் ஒரு படத்தை எடுத்துள்ளார் எனும் போது படத்தின் மீது எதிர்பார்ப்பு எழுவது இயல்பு..

நாம் பலநேரம் செய்திகளில் படிக்கும், ‘புலி அடித்து மனிதன் மரணம்’ கதைதான் ஷெர்னி. வனப்பகுதியான பிஜாஸ்பூரின் டிவிஷனல் ஃபாரஸ்ட் ஆபிஸராக இருக்கிறார் வித்யாபாலன். அவர் அங்கு வந்த ஒன்றரை மாதங்களுக்குள்ளாக ஒரு கிராமவாசியை புலி சாகடிக்கிறது. மக்கள் பயந்து போகிறார்கள். புலியைப் பிடிப்பதற்கான முயற்சியை வனஇலாகா மேற்கொள்கிறது. கூண்டு வைத்துப் பிடிப்பது போன்ற பழங்கால முயற்சிகள் தோல்வியை தருகிறது. வனத்தில் வைத்திருக்கும் கேமரா மூலமாக, அவர்கள் தேடுவது பி12 என பெயரிடப்பட்ட பெண் புலி என்பது தெரிய வருகிறது. பி 12 இன் இருப்பிடத்தை அவர்கள் கண்டுபிடிக்கும் முன் அது இன்னொருவரை பலி வாங்குகிறது.

தேர்தல் நெருங்கும் நேரம் என்பதால், ஆளுங்கட்சி எம்எல்ஏ மீது பழி போடுகிறார் முன்னாள் எம்எல்ஏ. பிரச்சனை பெரிதாகிறது. வன இலாகாவின் ஜீப் கொளுத்தப்படுகிறது. எம்எல்ஏ வேட்டைக்காரர் ஒருவரை அழைத்து வருகிறார். ஏற்கனவே பல புலிகளை கொன்றவர் அவர்.

வித்யாபாலனுக்கு புலியை கொல்வதில் உடன்பாடில்லை. மறுபுறம் கிராமவாசிகளையும் சமாதானப்படுத்த வேண்டும். அத்துடன் பி 12 ஐ கண்டுபிடிக்கும் பணியும் உள்ளது. பிரச்சனை ஒரு முடிவை எட்டும் முன், கரடித் தாக்குதலில் ஒருவன் இறக்க, அதை புலி அடித்து மரணம் என்று முன்னாள் எம்எல்ஏ மாற்றுகிறார். வித்யாபாலனால் துரத்திவிடப்பட்ட வேட்டைக்காரர், தனது அரசியல் தொடர்புகளை வைத்து மீண்டும் வருகிறார். பி 12 க்கு இரண்டு சிறிய குட்டிகள் இருக்கிறது. அதுவும் ஆள்க்கொல்லி புலியாக மாறும், ஆகவே அதையும் சாகடிக்க வேண்டும் என்கிறார் வேட்டைக்காரர். அதிகாரம் அவருக்கு துணை இருக்கிறது. இறுதியில் சட்டத்துக்குப் புறம்பாக பி 12 ஐ அவர் சுட்டுக் கொல்கிறார். அதற்கு உடந்தையாக இருக்கும் உயரதிகாரி வித்யாபாலனை மியூசியத்தின் மேற்பார்வையாளராக வேறு துறைக்கு மாற்றுகிறார்.

இந்தியாவில் சரி செய்ய வேண்டிய பல்வேறுப் பிரச்சனைகளில் ஒன்று, வனவிலங்கு பாதுகாப்பு. வனப்பகுதிகளை மனிதர்கள் ஆக்கிரமிக்கையில் வனவிலங்குகளின் பாதைகள் மறிக்கப்பட்டு, அவை குடியிருப்புகளுக்கு வருகின்றன. காலங்காலமாக வனத்தில் வாழும் ஆதி குடிகளை அங்கிருந்து அப்புறப்படுத்தவும் கூடாது, வனவிலங்குகளையும் பாதுகாக்கவும் வேண்டும் என்ற இருதுருவப் பிரச்சனையை இந்தியா இந்நாள்வரை சரிவர கையாண்டதில்லை. அதிலிருக்கும் ஓட்டைகள், பொறுப்பான அதிகாரிகளின் உதாசீனம், அரசியல்வாதிகளின் சுயநலம், மீடியாக்களின் பிரேக்கிங் நியூஸ் வெறி என அனைத்தையும் ஷெர்னி மௌனமாக காட்சிப்படுத்தியுள்ளது. காட்டிலாகாவின் சில அடிமட்ட ஊழியர்கள் அனுபவ அறிவுடன் நேர்மையாக நடந்து கொள்கிறார்கள். அவர்களின் நோக்கம் காட்டிலிருக்கும் பி 12 புலியை பாதுகாப்பான நேஷனல் பார்க்கிற்கு திருப்பிவிட வேண்டும் என்பதே. ஆனால், அந்தப் பாதையை மறித்து காப்பர் சுரங்கம் தோண்டி வைத்திருக்கிறார்கள். பல்லாயிரம் ஏக்கரில், பல நூறடி ஆளமுள்ள பள்ளம் புலிகளுக்கும் நேஷனல் பார்க்கிற்கும் இடையே வில்லனாக இருக்கிறது.

சோர்வான வேலை, குறைவான சம்பளம், 9 வருடங்களாக கிடைக்காத பிரமோஷன் என ஒரு சராசரி அதிகாரியை பிரதிபலிக்கிறார் வித்யபாலன். கல்லூரி பேராசிரியாக இருந்து கொண்டே வனவிலங்குகள் பாதுகாப்பில் ஆர்வம் காட்டுகிறவராக வரும் விஜய் ராஸ், வேட்டைக்காரராக வரும் சரத் சக்ஸேனா, வித்யபாலனின் உயரதிகாரியாக வரும் பிரிஜேந்திர காலா என அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.

ஆவணப்படம் போன்று நிதானமாக நகர்கிறது ஷெர்னி. வணிக சினிமாவுக்கான புனைவுகள் முற்றிலுமாக தவிர்க்கப்பட்டுள்ளது. திடீர் திருப்பங்களோ, தனி மனித சாகஸங்களோ படத்தில் இல்லை. புலி மனிதர்களைத் தாக்கும் காட்சிகள்கூட தவிர்க்கப்பட்டு, இந்த உடல்கள் மட்டுமே காட்டப்படுகின்றன. முக்கியமானப் பிரச்சனை ஒன்றை அசலாக காண்பிக்க வேண்டும் என்ற நோக்கம் மட்டுமே இயக்குனரிடம் காண்கிறோம். அதனால், பெருவாரியான ரசிகர்களை படம் என்டர்டெயின் செய்ய வாய்ப்பில்லை. காலங்காலமாக தொடரும் வனவிலங்குப் பிரச்சனைப் போல இந்தப் படமும் புறந்தள்ளப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!