கோவையிலிருந்து விதைச் சான்று மற்றும் அங்ககச் சான்றிதழ் துறையின் தலைமையிடத்தை சென்னைக்கு மாற்றக்கூடாது என்று தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தலைவர் பழனிச்சாமி விதைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.
கோவையில் இயங்கிவரும் விதைச் சான்று மற்றும் அங்கக சான்றிதழ் வழங்கும் துறையின் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றுவதாக வேளாண்மைத் துறை அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் தலைவர் பழனிச்சாமி தலைமையில் விவசாயிகள் விதைகளுடன் வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு வழங்கப்பட்டது.
இம்மனுவில் இச்சான்று வழங்கும் தலைமை இடத்தை சென்னைக்கு மாற்றினால் கொங்கு மண்டலத்தில் இயற்கை விவசாயம் முடக்கப்படும் அபாயம் ஏற்படும் என்றும், சென்னைக்கு விதைச்சான்று துறையின் தலைமை இடத்தை மாற்றுவதால் விவசாயிகள் அதன் மூலம் பல்வேறு போக்குவரத்து சிக்கல்களை நேரிடக் கூடும் என்பதாலும் இந்நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் தமிழ்நாடு விவசாய சங்கம் சார்பில் வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் மாவட்ட துணை தலைவர் கொங்கு பெரியசாமி மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.