இந்தியாசெய்திகள்

விஜய் மல்லையாவுக்கு சொந்தமான மும்பையில் உள்ள கிங்பிஷர் பங்களா ரூ.52 கோடிக்கு ஏலத்தில் விற்பனை

44views

விஜய் மல்லையாவின் கிங்பிஷர்நிறுவனத்துக்குச் சொந்தமான பங்களா ரூ.52.25 கோடிக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டது. தொடர்ந்து 8 முறை ஏல விற்பனை தோல்வி அடைந்த நிலையில் 9-வது ஏலத்தில் மூன்றில் ஒரு பங்கு விலைக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இந்திய வங்கிகளில் ரூ.9,000 கோடி அளவுக்கு கடன் வாங்கி மோசடி செய்துவிட்டு, இங்கிலாந்து தப்பிய தொழிலதிபர் விஜய் மல்லையாவிடமிருந்து கடனை மீட்க அவரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவ்வாறு கைப்பற்றப்பட்ட மும்பை விமான நிலையம் அருகில் விலே பார்லேவில் உள்ள கிங்பிஷர் பங்களாவை 2016-லிருந்து ஏலத்தில் விற்பனை செய்ய முயற்சி எடுத்து வருகிறது கடன் மீட்பு தீர்ப்பாயம்.

ரூ.150 கோடி மதிப்புள்ள கிங்பிஷர் ஹவுஸ் பங்களாவுக்கு 2016-ல் முதல் ஏலத்தில் ஆரம்ப விற்பனை மதிப்பு ரூ.135 கோடி என கடன் மீட்பு தீர்ப்பாயம் நிர்ணயித்தது. ஆனால் ஏலம் வெற்றியடையவில்லை. அதன்பிறகு நடந்த ஏல விற்பனைகளில் தொடர்ந்து விலையைக் குறைத்துவந்தபோதும் விற்பனை ஆகவில்லை.

மும்பை விமான நிலையத்தின் அருகில் இருப்பதால் இந்த இடத்தில் கட்டுமானத்துக்குப் பல்வேறு கட்டுப்பாடுகள் உள்ளன. இதனால் இந்த இடத்தின் மதிப்பு உயர்வதற்கான வாய்ப்புகள் குறைவு என்பதால் ஏலத்தில் நிர்ணயிக்கப்படும் மதிப்புக்கு வாங்குவதற்கு யாரும் தயாராக இல்லை எனக் கூறப்பட்டது.

தொடர்ந்து 8 ஏல விற்பனைகள் தோல்வி அடைந்த நிலையில் ஒருவழியாக சமீபத்தில் நடந்த 9-வது ஏலத்தில் ரூ.52.25 கோடிக்குவிற்பனை ஆனது. ஹைதராபாத்தைச் சேர்ந்த சாட்டர்ன் ரியல்டர்ஸ் நிறுவனம் இந்த பங்களாவை ஏலத்தில் வாங்கியுள்ளது. இது இந்த பங்களாவின் மதிப்பில் மூன்றில் ஒரு பங்கு விலை ஆகும்.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!