தமிழகம்

விஜயதசமி நாளான இன்று முதல்.. ஊரடங்கில் கூடுதல் தளர்வு.. வார இறுதி நாட்களில் திறக்கப்பட்ட கோவில்கள்

59views

இன்று முதல் வாரத்தின் அனைத்து நாட்களிலும் கோவில்களை திறந்து பக்தர்களுக்கு அனுமதி வழங்குவதற்கு தமிழக அரசு நேற்று உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து மதுரை மீனாட்சியம்மன் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் வெள்ளிக்கிழமையான இன்று காலை முதல் பக்தர்களுக்கு தரிசனம் செய்ய நடை திறக்கப்பட்டு உள்ளது.

இதுவரை, சுமார் இரண்டரை மாதங்களாக, வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்களில் கோவில்களில் பக்தர்களை அனுமதிக்கவில்லை. எந்த ஒரு வழிபாட்டுத் தலத்திற்கும் இதுதான் விதி முறையாக இருந்தது.

கொரோனா நோய் பரவலை தடுப்பதற்கு பொதுமக்கள் அதிகம் கூட கூடிய இந்த நாட்களில் வழிபாட்டு தலங்களை மூடி வைப்பது என்பது தமிழக அரசின் முடிவாக இருந்தது.

வெள்ளி, சனி, ஞாயிறுகளில் வழிபாட்டுத் தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி.. தமிழக அரசு உத்தரவு!

இந்த நிலையில் வார இறுதி நாட்களில் கோவில் நடையை திறக்க வேண்டும் என்று பாஜக சார்பில் மாநிலம் முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. 10 நாட்களுக்குள் வார இறுதி நாட்களில் கோவில் நடை திறக்கும் முடிவை தமிழக அரசு எடுக்காவிட்டால் மாநிலத்தை ஸ்தம்பிக்க செய்யும் அளவுக்கு போராட்டங்கள் இருக்கும் என்று பாஜக தலைவர் அண்ணாமலை எச்சரிக்கை விடுத்திருந்தார் .

இந்தநிலையில் மாதாமாதம் மருத்துவ வல்லுநர் குழுவுடன் முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துவது போல நேற்று நடத்தினார். அந்த ஆலோசனையின் முடிவில் வார இறுதி நாட்களிலும் வழிபாட்டுத்தலங்களை திறந்து வைக்க அனுமதி வழங்கியது தமிழக அரசு. விஜயதசமி நாளான இன்று முதல் இந்த உத்தரவு அமலுக்கு வந்துள்ளதால் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மதுரையில் உள்ள உலக பிரசித்தி பெற்ற மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று காலை 6 மணி முதல் பக்தர்கள் வழிபடுவதற்கு நடை திறந்து வைக்கப்பட்டது. நான்கு கோபுர வாயில்கள் வழியாகவும் பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்கள் அதிகளவுக்கு வரவில்லை என்றபோதிலும் கோவில் நடை திறப்பது பற்றி தகவல் அறிந்த மக்கள் காலையிலேயே கோவிலுக்கு வர தொடங்கியதை பார்க்க முடிந்தது. பிற பக்தர்களுக்கும் இந்த தகவல் சென்று சேரும்போது கூட்டம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கோவிலை சுற்றிலும், பூக்கடைகள், பழக் கடைகள் வைத்திருப்போர் மகிழ்ச்சியுடன் வியாபாரத்தை தொடங்கி இருப்பதை பார்க்க முடிகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முக கவசம் அணிந்து இருக்கவேண்டும், தனிமனித இடைவெளி கடைபிடிக்க வேண்டும், கையில் சானிட்டைசர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும், உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும் என்பது போன்ற வழிகாட்டு நெறிமுறைகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் பின்பற்றப்படுகிறது. இதேபோல தமிழகத்தில் உள்ள அனைத்து முக்கிய கோவில்கள் மற்றும் அனைத்து வகை வழிபாட்டு தலங்களிலும் பக்தர்கள் வார இறுதி நாளான இன்று அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!