இந்தியாசெய்திகள்

வாரங்கலில் உள்ள 808 ஆண்டு பழமையான ராமப்பா கோயில் உலக பாரம்பரிய சின்னமானது

60views

தெலங்கானா மாநிலம், வாரங் கலில் காக்கதீயர்கள் காலத்தில் கட்டப்பட்ட 808 ஆண்டுகள் பழமையான ருத்ரேஸ்வரர் கோயில் உள்ளது. கலைநயமிக்க இக்கோயில்,ராமப்பா கோயில் என அழைக்கப் படுகிறது. இக்கோயிலை உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக யுனெஸ்கோ அறிவித்துள்ளது.

யுனெஸ்கோ பாரம்பரியக் குழுவின் 44-வது கூட்டம் காணொலி மூலம் நடந்து வருகிறது. உலக பாரம்பரிய சின்னங்கள் குறித்து ஏற்கெனவே தாக்கல் செய்யப்பட்ட ஆதாரங்கள் குறித்து இக்குழு விவாதித்து வருகிறது. இந்தியாவின் பட்டியலில் இருந்த வாரங்கல் ராமப்பா கோயில், குஜராத்தில் உள்ள துலாவிரா ஹரப்பன் நினைவுச் சின்னங்கள் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக் கப்பட்டது. இதில் ராமப்பா கோயில், உலகின் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் வாழ்த்து

இதுதொடர்பாக ட்விட்டரில் பிரதமர் மோடி வெளியிட்ட செய்தி யில், ‘அருமையான தகவல்! மக்கள் அனைவருக்கும், குறிப்பாக தெலங்கானா மக்களுக்கு எனது வாழ்த்துகள். காக்கதீய வம்சத்தின் சிறப்பான கைவினைத் திறனுக்கு ராமப்பா கோயில் எடுத்துக்காட்டாக உள்ளது. கம்பீரமான இக்கோயில் வளாகத்தை நீங்கள் பார்வையிட்டு அதன் மகத்துவத்தின் முதல் அனுபவத்தை பெற வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்’ என்று கூறியுள்ளார்.

செகந்திராபாத் பாஜக எம்.பி.யும் மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சருமான ஜி.கிஷண் ரெட்டியும் இந்திய தொல்பொருள் ஆய்வுக் கழகத் துக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

வாரங்கல் காக்கதீய பாரம் பரிய அறக்கட்டளை குழு உறுப்பினர் பாண்டுரங்கா ராவ் கூறும்போது, ‘ராமப்பா கோயில் குறித்த பல ஆதாரங்கள், வீடியோ பதிவுகளை பல மொழிகளில் அனுப்பினோம். 13-ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ராமப்பா கோயில் இனி உலகளவில் புகழ் பெறும்’ என்றார்.

ஹைதராபாத் போன்றே வாரங்கல் மிகப் பழமையான நகரம். இதனை தலைமையிடமாக கொண்டு காக்கதீய மன்னர்கள் ஆட்சி புரிந்தனர். இவர்களது காலத்தில் வாரங்கலில் கட்டப்பட்ட வாரங்கல் கோட்டை, ஆயிரங்கால் மண்டபம், சுயம்பு கோயில், கீர்த்தி தோரணங்கள் போன்றவையும் ராமப்பா கோயிலை போன்றே பிரசித்தி பெற்றவையாகும்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!