ஏங்க! எங்க அக்கா மக கல்யாணம் நாளைக்கு. ஞாபகம் இருக்குதா? லீவு சொல்லிடுங்க. நீங்க தான் அந்தப் பெண்ணை வளர்த்தீங்க.இதுக்கும் வரல-ன்னு சொல்லிடாதீங்க. மழை வேற பெய்துகிட்டே இருக்கு. நம்ப ராசு தம்பிய ஆட்டோ எடுத்து வரச் சொல்லுங்க.போயிட்டு வந்துரலாம் என்று செல்வி தன் கணவன் மாரியப்பனிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்.
அவனோ ஏதோ யோசனையுடன் தலை குனிந்து வாசல் நிலைப் படியைப் பிடித்த வண்ணம் இருந்தான்.
செல்வி! என்னைய தொந்தரவு செய்யாத.
நான் வரல.நீயும் பசங்களும் போயிட்டு வந்திடுங்க. ஆட்டோவுக்குச் சொல்லிடறேன்
என்று வழக்கம் போல் சொல்லி விட்டுச் சென்றான்.
12-ஆம் வகுப்பு படிக்கும் அவனுடைய மகன் ராதா கிருஷ்ணன்
ஏம்மா? அப்பா எப்போதும், எங்கேயும் வரமாட்டேன்-னு சொல்றாரு? என்றான் ஏக்கமாக.
கண்களில் நீர் வழிய உள்ளே சென்று விட்டாள் செல்வி.
காலையில் தன் இரண்டு பசங்களுடன் திருமணத்திற்குச் சென்றாள். ஆட்டோவில் பிள்ளைகளுடன் ஏதேதோ பேசியபடி இருந்தாள்.
நாட்கள் உருண்டது. மாரியப்பனின் பிள்ளை 12-ஆம் வகுப்புத் தேர்வில் மிக நல்ல முறையில் தேர்ச்சி பெற்றுப் பள்ளி முதல் மாணவனாக வந்திருந்தான்.
தலைமை ஆசிரியர் மிக்க மகிழ்ச்சியுடன் அவனைப் பாராட்டினார். உனக்குப் பரிசு தர விரும்புகிறேன். என்ன வேண்டுமோ கேள் என்றார்.
நீண்ட நேர தயக்கத்திற்குப் பிறகு
சார்!!
எங்க அப்பாவை நான் கட்டிப் பிடிக்கனும். இது தான் எனக்கு வேண்டும் என்றான்.
ஆச்சர்யத்தால் தலைமையாசிரியர் வாயடைத்து நின்றார். என்னப்பா சொல்லுற?? ஏன் இப்படி பட்ட ஆசை உனக்கு? ஒன்னுமே புரியலையே என்றார். அவன் சொல்லச் சொல்ல வாயடைத்து நின்றார். பிறகு
தன் மனதில் ஏதோ நினைத்தபடி…
சரி டா தம்பி. கவலைப் படாதே. நான் இதற்கு ஒரு நல்ல ஏற்பாடு செய்யறேன் என்று சொல்லி அவனை அனுப்பி வைத்தார்.
அன்று அரசு மேல்நிலைப் பள்ளி புதுப் பொலிவுடன் விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆண்டு விழாவிற்கு கலெக்டர் வந்திருந்தார். மற்றும் சில அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருந்தனர். இதற்காகவே அன்று மழை பெய்வது நின்றிருந்ததாகத் தோன்றியது.
தலைமையாசிரியர் தன் உரையில்
பள்ளி பற்றிய உயர்ந்த விஷயங்களைக் கூறினார். மாணவச் செல்வங்களின் பல்வேறு சாதனைகளையும் எடுத்துரைத்தார். பிறகு கலெக்டர் பேசினார். இப்பள்ளிக்கு வேண்டிய உதவிகள் அனைத்தும் செய்து தருவதாக வாக்குறுதி அளித்தார்.
விருது வழங்கும் நிகழ்ச்சியில் பள்ளி முதல் மாணவனாக ராதா கிருஷ்ணன் அழைக்கப் பட்டான்.
அவன் கண்களை அவனால் நம்பவே முடியவில்லை. மேடையில் தன் தந்தை கூச்சத்துடன் நின்றிருப்பதைப் பார்த்தான். கீழே உட்கார்ந்திருந்த செல்விக்கும் ஆனந்தத்தில் கண்கள் கலங்கியது.
மைக்கைப் பிடித்து தலைமையாசிரியர்…. மாணவ-மாணவியர்களே!! பெற்றோர்களே! மற்றும் மதிப்பிற்குரிய அனைத்துக் கல்வி அதிகாரிகளே!! வணக்கம்.
இங்கு நின்றிருக்கும் திரு. மாரியப்பன் பள்ளி முதல் மாணவனின் தந்தை. இவர் நம் சமுதாயத்திற்கு ஆணி வேராக இருப்பவர். நாம் அனைவரும் நிம்மதியாகவும், சுகமாகவும் நம் வாழ்க்கையை வாழ இவர் ஒரு காரணம். இவரைப் பற்றிப் பேச இவரது பிள்ளை ராதா கிருஷ்ணனை மேடைக்கு அழைக்கிறேன் என்று மைக்கை அவனிடம் கொடுத்தார். தயங்கிய அவனை தன் கண்களால் சமாதானம் செய்தார்.
சற்றே கால்கள் நடுங்க, பயந்தபடி
எல்லோருக்கும் வணக்கம்.
எங்.. எங்க அப்… என்று பேச ஆரம்பிக்கும் போதே கண்கள் குளமாக ஆரம்பித்தது அவனுக்கு. நாதழுதழுக்க….
எங்க அப்பா சென்னை கார்பரேஷன்-ல சாக்கடை நீர்-டிரைனேஜ் வடிகால் வாரிய பிரிவுல வேலை செய்யறாரு. ஏரியால வீடுகளில் டிரைனேஜ் அடச்சுகிட்டா இவரு உள்ள இரங்கி அடைப்பை எடுத்து சரி செய்வாரு. தன்னைப் பத்தி எப்பவுமே ரொம்பத் தாழ்வாகவே நினைப்பாரு. யார் வீட்டுக்கும், எந்த ஒரு விசேஷத்துக்கும் வரவே மாட்டாரு.
எங்ககிட்ட இருந்து தள்ளியே இருப்பாரு. தொட்டுப் பேசவே மாட்டாரு. தன் மேல் அடிக்கும் சாக்கடை வாசம் எங்கள் மீது பட்டுடக் கூடாது என்கிற நினைப்புதான் அதற்குக் காரணம். எங்களுக்கு உடம்பு சரியில்லைனாக்கூட தள்ளி இருந்து மருகித் தவிப்பாரே தவிர கிட்ட வரவேமாட்டாரு. நாங்க மூனு பேரும் இவருடைய அன்பான தழுவலுக்காக ஏங்குறோம்.
இந்த உலகத்துல எந்த வேலையும் இழிவு இல்ல. திருடுவது, பொய் சொல்லிப் பிறரை ஏமாற்றுவது மட்டுமே கேவலம்.ஆனா இதை உணராத எங்க அப்பா எங்களை இழந்த நேரங்கள் அதிகம்.போதும் எல்லாமே.
அப்பா! பிளீஸ்! என்னைக் கட்டிப் பிடிங்க!!
என்று கைகளை நீட்டியபடி கண்களில் கண்ணீரோடு ஒவ்வொன்றாகக் கூறினான் அவன். மேலும் பேசமுடியாது ஆசிரியரைப் பார்த்தான்.
உடனே அவர் அவனை சமாதானம் செய்துவிட்டு, மக்களே!!
தன் தந்தை கையால் இவன் விருதைப் பெற வேண்டும் என்று நான் நினைத்தேன்.எனவே பள்ளியின் டிரைனேஜில் அடைப்பு இருப்பதாகப் பொய் கூறி இவரை இங்கு வரவழைத்தேன். தவறு எனில் மன்னிக்கவும் என்றவுடன் கைத்தட்டல் விண்ணை முட்டியது. உடனே மாரியப்பனின் கழுத்தில் மாலையை அணிவித்தார் ஆசிரியர்.
கூனிக் குறுகி நின்ற மாரியப்பன் செய்வதறியாது ஓடி வந்து தன் பையனைக் கட்டித் தூக்கினார். கூட்டம் ஆர்ப்பரித்தது. மேடையில் அதிகாரிகள் எழுந்து நின்று கைத்தட்டினர். அவனது குடும்பத்தையும் மேடைக்கு அழைத்தார் ஆசிரியர்.
தன் மகன் கூறியது போல் தான் இழந்தது இத்தனை வருடங்களில் மிக அதிகம் என்று உணர்ந்து மூவரையும் கட்டியணைத்தார்.
தன் தந்தையின் மீதிருந்து வந்த வாசத்தை முதன் முதலில் அவன் நுகர்ந்த போது, உலகத்தில் உள்ள அனைத்து உயர் ரக வாசனை திரவியங்கள் இதற்கு ஈடு இல்லை என்று எண்ணினான்.
தன் தந்தையின் தோளில் இருந்த மாலையின் பூக்கள் அவரின் வாசனையில் தோற்று,
தலைகுனியத் தொடங்கியது.
-
சுதா சேஷாத்திரி