கட்டுரை

வளியில் ஒரு விந்தை..

452views
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி 25ஆந் தேதி ஏரியான் 5 விண்கலத்தில் பிரெஞ்ச் கயானாவிலிருந்து அனுப்பப்பட்டது. 20 வருட பெருங்கனவு செயலாக்கப் பட்டது.
சுருக்கமாக ஜேம்ஸ் வெப் (James Webb) தொலைநோக்கி, ஹபுள் (Hubble) தொலைநோக்கியின் அடுத்த தலைமுறை.
இந்த பெரும் திட்டத்தை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொறியாளர்கள் இருபது வருடங்களாக உலக அளவில் பங்கேற்று நடத்தி இருக்கிறார்கள்.
சிறிதும் பெரிதுமாக, நுணுக்கமும் விஸ்தாரமாக பலவகை பொறியியல் சிந்தனைகள் இந்த திட்டத்தில் மிக நேர்த்தியாக செயல்படுத்தப் பட்டுள்ளன.
உதாரணமாக சில. இதில் உள்ள கண்ணாடிகள் பெரிலியம் என்று தனிமத்தால் ஆனது. அதற்கு மிக மெல்லிய தங்க முலாம் பூசப் பட்டுள்ளது. ஏனெனில் தங்கம் அகச்சிவப்புக் கதிர்களை மிக சிறப்பாக பதிவு செய்யக்கூடியது.
கண்ணாடிகளின் பின்புறம் பல சிறிய மோட்டார்கள் பொருத்தப் பட்டுள்ளன. அவைகளை இயக்குவதன் மூலம் அந்த கண்ணாடி தளத்தின் வளைபரப்பை (curvature) மிக நுணுக்கமாக மாற்ற முடியும். இது தொழில்நுட்பத்தின் மிக உச்சமான புள்ளி என்று வல்லுநர்கள் கருதுகின்றனர்.
இந்த மொத்த திட்டமே வளியிலுள்ள (Space) அகச்சிவப்பு கதிர்களை பதிவு செய்யத்தான். அகச்சிவப்பு கதிர்கள் பிரபஞ்சத்தின் ஆரம்ப கட்டத்தில் உள்ள மிக முக்கியமான செய்திகளை உள்ளடக்கியுள்ளது என அறிஞர்கள் கருதுகின்றனர். இவை ஆரம்ப கட்டத்தில் (காலத்தில்?) புற ஊதாக்கதிர்கள் ஆக இருந்தாலும் டாப்ளர் விளைவினால் (Doppler Effect) அகச்சிவப்பு கதிர்கள் ஆக மாறிவிடுகிறது. இதை ரெட் ஷிஃப்ட் (Red Shift) என்று கூறுகின்றனர். எனவே இந்த நுண்ணிய அகச்சிவப்புக் கதிர்களை பதிவு செய்வதே ஒரு முக்கியமான மற்றும் தேவையான செயல்பாடாகும்
அகச்சிவப்பு கதிர்களை பதிவு செய்வதில் சில சிக்கல்கள் உள்ளன. முதலாவது சூரியக்கதிர்களும் அதனால் ஏற்படும் வெப்பமும் ஏற்கனவே உள்ள அகச்சிவப்பு கதிர்களை அழித்து விடுகின்றன. அதனால் இந்த தொலைநோக்கியின் இடம், பூமிக்கு பின்னால் தான் இருக்க வேண்டும் என முடிவு செய்தனர். இரண்டாவது பூமி சூரிய வெளிச்சத்தை பிரதிபலிப்பதாகவும், அது வேறு சில அகச்சிவப்புக் கதிர்களை உருவாக்குகிறதை கண்டு அறிந்துள்ளனர். இதனாலேயே பூமியிலிருந்து சற்று தொலைவில் இருக்க வேண்டும் என்பதையும் முடிவு செய்தனர். இதற்காக இந்த டெலஸ்கோப்பை கிட்டத்தட்ட 10 லட்சம் கிலோ மீட்டர் தொலைவில் இருந்து இயக்கப்பட வேண்டும் என வரையறுத்தனர். இது பூமியில் இருந்து சந்திரன் உள்ள தூரத்தைப் போல குறைந்தபட்சம் நான்கு மடங்கு உள்ளது என்று குறிப்பிடத்தக்கது. மூன்றாவதாக இந்த உபகரணம், அனைத்தையும் மீறி வரும் சூரிய வெப்பத்தை தடுத்து, மிகக்குறைவான சக்தியை உபயோகித்து அது இயங்க வேண்டும்.
இந்தக் காரணங்களினால் லாக்ரானஜ் புள்ளி (Lagrange Point) என்னும் புள்ளிக்கு இந்த டெலஸ்கோப்பை எடுத்துச் செல்ல வேண்டும். லாக்ரானஜ் புள்ளிகளில் இன்னொரு நுணுக்கம் உள்ளது. சூரியனின் ஈர்ப்பு சக்தியும் பூமியின் ஈர்ப்பு சக்தியும் சமன் செய்யப் பட்டு இருக்கும் புள்ளிகள் ஆகும். இதில் இருக்கும் போது நாம் குறைந்த அளவு சக்தியிலேயே உபகரணங்களை இயக்க முடியும்
இப்பொழுது சில அடுத்த படி சிக்கல்கள். இந்தக் கலத்தை விண்வெளிக்கு செலுத்தும்போது இறுதி வடிவத்திலேயே இதனை விண்வெளிக்கு அனுப்ப முடியாது. அதனை காகித மடிப்புகள் போல மடித்து விண்வெளிக்கு சென்ற பின் வெவ்வேறு இடங்களில் அது விரிந்து இறுதி வடிவத்திற்கு கொண்டு வர வேண்டும். அதையும் அவர்களது திட்டத்தில் வெவ்வேறு மைல்கற்களாக வடித்துள்ளனர். இந்த பொருள் ரீதியான மடிப்பை ஆரிகாமி என்கிற ஜப்பானிய காகித கலைக்கு ஒப்பிடலாம்.
இந்த தொலைநோக்கியை பற்றிய திட்டம் அதன் காணொளிகள் அது விண்ணில் சென்ற பின் தற்போது எங்கு உள்ளது ஆகியவை எல்லாம் இணையத்தில் சுட்டிகளாக உள்ளன. அதைக் கீழே குறிப்பிட்டுள்ளேன்.
இது பூமியில் இருந்து வெகு தொலைவில் இருப்பதால் இதை இயக்குவதும் கண்காணிப்பதும் தொலைவிலிருந்தே செய்யவேண்டிய அவசியமும் அதற்கான டிசைன்களும், கட்டமைப்பும், தொழில்நுட்பமும் இருக்க வேண்டும். இந்த அணுகுமுறை மிகப்பெரிய சாதனையாக இருக்கிறது. இந்த தொலைநோக்கி சேர்க்கும் தரவுகள் யாவும் ஓபன் சோர்ஸ் என்கிற முறையில் அனைவருக்கும் கிடைக்கக் கூடிய ஒன்றாகும். இதுவும் ஒரு முக்கியமான அணுகுமுறை
இந்த தொலை நோக்கியின் பண மதிப்பை தாண்டி இதை உருவாக்க, இயக்க, விண்ணில் செலுத்த, அதைத்தவிர தொடர்ச்சியாக அதை கண்காணிக்க ஒரு மாபெரும் பொறியாளர் சமூகமும், இதை சுற்றி சேகரிக்கும் தகவல்களை கொண்டு வானவியலில் உள்ள பல்வேறு ஆராய்ச்சிகளையும் சாத்தியப்பாடுகளை உள்ளடக்கிய ஒரு பெரும் கனவு பெரும் வியப்பாக, களிப்பாக இருக்கிறது.
கலீலியோவின் தொலைநோக்கி இதிலிருந்து நாம் வெகுதூரம் வந்துவிட்டோம் அது ஐரோப்பிய மறுமலர்ச்சியின் விதையாக இருந்தது. இந்த தொலைநோக்கி நமது கற்பனையையும் விஞ்ஞான நோக்கையும் சமன்செய்து புதிய நவீன கனவுகளை, அதைத் தொடர்ந்த ஆராய்ச்சிகளையும் விதைக்கிறது, வளர்க்கிறது.
எனது பார்வையில் இந்த முயற்சி உலக அதிசயங்களுக்கு ஒரு தளத்திற்கு மேலே சென்று விட்டது என தோன்றுகிறது. எனக்கு இருக்கும் களிப்பில் இதைப்பற்றி எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கின்றேன். இது அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு என்றும் எதிர்காலத்தில் ஏதோ ஒரு வகையில் ஏதோ ஒரு செயல்பாட்டில் இயங்கி ஒரு மாபெரும் செயல் செய்ய ஏதுவாக இருக்கும் என நம்புகிறேன்.
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் பொறியியல் பித்து
https://youtu.be/aICaAEXDJQQ
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியை கண்காணிக்க
https://youtu.be/6RE7PhyPosU
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்வெளிக்கு அனுப்புதல்
https://youtu.be/7nT7JGZMbtM
ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எவ்வாறு இயங்குகிறது

https://youtu.be/4P8fKd0IVOs
தற்போது வளியின் வெவ்வேறு தரவுகளை சேகரிக்கும் கருவியாக, பூமிக்கு பின்புறம் சந்திரனிலிருந்து நான்கு மடங்கு தூரத்தில் பூமியுடன் சேர்ந்து வலம் வருகிறது.
இது ஒரு கண்காணிப்பகம் அல்லது கவனிப்பகம் (observatory) என கொள்ளலாம்.
இந்தக் கலம் பூமியிலிருந்து விடுபட்ட இருபத்தி ஒன்பதாம் நாள் எல் டூ என்கிற லாக்ரான்ஜ் பாயிண்ட் என்ற புள்ளியை அடைந்துள்ளது. தற்போது இந்தக் கலத்தின் எல்லாப் பகுதிகளும் முழுமையாக விரிவடைந்துள்ளது. அதாவது அதன் கதிரியக்க கவசம், தங்க முலாம் பூசப்பட்ட பெரிலியம் கண்ணாடிகள், இரண்டாம் லென்ஸ் மற்றும் முதலாம் லென்ஸ் என அனைத்தும் இதுவே விரிவடைந்து உள்ள நிலையில் இது எல் டூவை நோக்கி நகர்ந்து விட்டது.
இந்த முழு விரித்தலில் 50 க்கு மேற்பட்ட வரிசைப்படுத்தல் முறைகளும் (deployment) 178 திறவு முறைகளும் (Release mechanism) தூரத்தில் இருந்து இயக்கப்படும் (Remote operations) முறையில் சிறப்பாக செயல் பட்டுள்ளது.
  • M.முரளி
    தொழில் நுட்ப ஆலோசகர்

1 Comment

  1. மிகவும் தெளிவாக, சிறுவர், சிறுமிகளுக்கு புரியும் வகையில் விளக்கம் தந்தமைக்கு மிகவும் நன்றி. வணக்கம்

Leave a Response

Right Click & View Source is disabled.

error: Content is protected !!