தமிழகம்

வல்லுநர் குழு பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி: இந்து சமய அறநிலையத் துறை அறிவிப்பு

33views

வல்லுநர் குழுவின் பரிந்துரையின்பேரில் தமிழகம் முழுவதும் 551 கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை நேற்று வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு:

ஆகமவிதிகளின்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்கு நடத்த வேண்டும். பழமை வாய்ந்த கோயில்களில், அவற்றின் பழமை மாறாது சீரமைத்தல், புதுப்பித்தல், பாதுகாத்தல் ஆகிய பணிகளை மேற்கொள்ள தொல்லியல் துறை வல்லுநர்கள் கருத்துரு பெற்று, மண்டலஅளவிலான வல்லுநர் குழு மற்றும்மாநில அளவிலான வல்லுநர் குழுவின் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, அக்குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப் பட்டு வருகிறது.

கோயில் திருப்பணி மேற்கொள்ள இரு வல்லுநர் குழுக்களால் பரிந்துரைக்கப்பட்ட, சென்னை வடபழநி ஆண்டவர் கோயில், புரசைவாக்கம் கங்காதீஸ்வரர் கோயில், திண்டுக்கல் மாவட்டம் பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயில், ராணிப்பேட்டை காளகஸ்தீஸ்வரர் கோயில் உள்ளிட்ட 551 கோயில்களுக்கு ஆகம விதிப்படி திருப்பணி மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

திருப்பணிகள் முடிவடைந்தவுடன், குடமுழுக்கு நடத்தப்படும். பக்தர்கள் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிகள் குறித்த விவரங்களை www.hrce.tn.gov.in என்ற இணையதளத்தில் ‘திருப்பணி வல்லுநர் குழு ஒப்புதல்’ என்ற பகுதிக்குச் சென்று, மாவட்டம் வாரியாக கோயில்களைத் தேர்வு செய்து, விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம். இதன் மூலம் தங்கள் பகுதிகளில் உள்ள கோயில்களின் திருப்பணிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிந்துகொண்டு, திருப்பணிக்கான வேலைகள் முடிவுற்றபின், குடமுழுக்கு நடத்துவதற்குபக்தர்கள் தங்கள் ஒத்துழைப்பைநல்கலாம். இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!