கனடாவில் இன்னும் 10 நாட்களில் பொதுத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மீண்டும் ஜஸ்டின் ட்ரூடோவே ஆட்சியை கைப்பற்றுவாரா? அல்லது மக்கள் ஆட்சி மாற்றத்தை கொண்டு வருவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சர்வதேச அளவில் பிரபலமாக அறியப்படும் பிரதமர்களில் கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் ஒருவர். கனடாவை கடந்து வெளிநாடுகளில் எல்லாம் அவருக்கு ரசிகர்கள் உண்டு. கடந்த 6 ஆண்டுகளாக கனடா பிரதமராக பதவி வகித்துவரும் ஜஸ்டின் ட்ரூடோ மூன்றாவது முறையாக பொதுத்தேர்தலை எதிர்கொள்ள இருக்கிறார். கனடாவில் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை பொதுத்தேர்தல் நடைபெறுவதுதான் வழக்கம். அதன்படி 2015ஆம் ஆண்டு தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்டு நாட்டின் பிரதமரானவர் ஜஸ்டின் ட்ரூடோ.
உலக அரசியல் அரங்கில் முக்கியத்துவம் பெறும் ஜோ பைடன் – மோடி சந்திப்பின் பின்னணி
2019ஆம் ஆண்டு தேர்தலில் பெரும்பான்மை இடங்கள் கிடைக்காமல் சிறு கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தார். தேர்தலுக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்கும் நிலையில் முன்கூட்டியே நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தல் அறிவிப்பை வெளியிட்டார். வரும் 20ஆம் தேதி பொதுத்தேர்தல் நடக்கும் நிலையில் லிபரல் கட்சியின் ஜஸ்டின் ட்ரூடோவுக்கும் கன்சர்வேட்டிவ் கட்சியின் எரின் ஓ டூலுக்கும் இடையே போட்டி அதிகரித்துள்ளது. கொரோனா பெருந்தொற்றை வெற்றிகரமாக கையாண்டு கட்டுக்குள் கொண்டு வந்த ஜஸ்டின் ட்ரூடோ அதன்மூலம் பெற்ற மக்கள் செல்வாக்கை வாக்குகளாக மாற்ற தேர்தலை முன்கூட்டியே நடத்துகிறார்.
ஆனால் தேர்தல் அறிவிப்புக்கு பின்னர்தான் அவருக்கு மக்கள் செல்வாக்கு குறைந்திருப்பது கருத்துக்கணிப்புகள் மூலம் தெரிய வந்துள்ளது. இது தவிர ட்ரூடோ நிர்வாகத்தின் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் எதிர்க்கட்சிகளால் முன் வைக்கப்பட்டுள்ளன. அரசு ஊழியர்கள், பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் கட்டாயம் தடுப்பூசி போடவேண்டும் என்ற அறிவிப்பும் அவருக்கு எதிர்ப்பை சம்பாதித்து கொடுத்திருக்கிறது. எனவே இந்த தேர்தல் ட்ரூடோவின் அரசியல் பயணத்தை தீர்மானிக்கும் தேர்தலாக இருக்கும் என்கின்றனர் அரசியல் வல்லுநர்கள்.