லடாக்கில் புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடம்: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் திறந்து வைத்தார்
கிழக்கு லடாக்கின் ரெசாங் லா பகுதியில் 1962 நவம்பர் 18-ல் சீனாவுக்கு எதிராக ஒரு பெரிய போர் நடந்தது.
18,000 அடி உயரத்தில் நடந்த இப்போரில் இந்திய ராணுவத்தின் மேஜர் ஷைத்தான் சிங் தலைமையிலான குமாவுன் படைப் பிரிவினர் துணிவுடன் போராடினர்.
சீன ராணுவத்துக்கு கடும் இழப்பை ஏற்படுத்தி வெற்றி பெற்றனர். உடல் முழுவதும் குண்டு காயங்களுடன் ஷைத்தான் சிங் வீரமரணம் அடைந்தார். மறைவுக்குப் பிறகு இவருக்கு நாட்டின் மிக உயரிய பரம் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது.
இந்நிலையில் ரெசாங் லா போரின் 59-வது நினைவு தினத்தைமுன்னிட்டு, அங்கு புதுப்பிக்கப்பட்ட போர் நினைவிடத்தை பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று திறந்துவைத்தார். ராணுவ தலைமை தளபதி பிபின் ராவத், ராணுவ துணைத் தளபதி சாண்டி பிரசாத் மொகந்தி, வடக்கு படைப்பிரிவு கமாண்டர் ஒய்.கே.ஜோஷி உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
ரெசாங் லா போரில் வீரமரணம் அடைந்த இந்திய வீரர்களுக்கு அமைச்சர் ராஜ்நாத் சிங் புகழஞ்சலி செலுத்தினார். இது தொடர்பாக அவர் பேசும்போது, ‘உலகின் மிகப்பெரிய மற்றும் சவாலான 10 போர்களில் ஒன்றாக ரெசாங் லா போர் கருதப்படுகிறது. இந்திய ராணுவத்தின் உறுதி மற்றும் அசாத்திய துணிச்சலுக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்த நினைவுச் சின்னம் வரலாற்றின் பக்கங்களில் அழியாதது மட்டு மல்ல நமது இதயங்களிலும் துடிக் கிறது’ என்றார்.