இசைப்புயல், ஆஸ்கார் நாயகன் என இந்திய திரையுலகினரால் போற்றப்படும் இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர்.ரஹ்மான். 1990 களில் மணிரத்னம் இயக்கிய ரோஜா படத்தின் மூலம் தனது திரையுலக இசைப் பயணத்தை தொடங்கியவர். மணிரத்னம், ஷங்கர் படங்களுக்கு ஆஸ்தான இசையமைப்பாளராக இருந்தவர்.
தமிழ், இந்தி படங்களுக்கு இசை அமைத்து வரும் ஏ.ஆர்.ரஹ்மான், இசையமைப்பாளர், பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், டைரக்டர் என அவதாரங்களை எடுத்து விட்டார். பத்ம பூஷன் விருது, 6 தேசிய விருதுகள், கிராமி விருதுகள், கோல்டன் குளோப் விருது, 15 ஃபிலிம் ஃபேர் விருதுகள், 17 தென்னிந்திய ஃபிலிம்பேர் விருதுகள், 2 ஆஸ்கார் விருதுகள் உள்ளிட்ட பல விருதுகளை வென்றுள்ளார்.
படங்களுக்கு மட்டுமல்ல பல தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை வசூலிக்க பல இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளார். 3 கவுரவ டாக்டர் பட்டங்களை பெற்ற ஏ.ஆர்.ரஹ்மான், பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார். தென்னிந்திய மொழி படங்களில் 7.1 surround sound டெக்னாலஜியை அறிமுகப்படுத்திய பெருமையும் ஏ.ஆர்.ரஹ்மானை தான் சேரும்.
இசையமைப்பாளராக அறிமுகமான நாள் முதல் மீசை இல்லாமல், சின்ன பையனை போன்ற தோற்றத்தில் தான் ஏ.ஆர்ரஹ்மான் தோன்றி வருகிறார். ஆனால் துபாயில் இசை அமைப்பு வேலைகளுக்காக சென்றுள்ள ஏ.ஆர்.ரஹ்மான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், மீசையுடன் இருக்கும் ஃபோட்டோவை முதன் முறையாக பகிர்ந்துள்ளார்.
அடையாளமே தெரியாத அளவிற்கு மீசையில், தோன்றி உள்ள ஃபோட்டோவை பதிவிட்டு, ஜும் மீட்டிங் ஆப்பில் மீசையுடன் இருக்கும் ஃபோட்டோ…நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என கேட்டுள்ளார் ஏ.ஆர்.ரஹ்மான். இதனை பலரும் பாராட்டி, கருத்து பதிவிட்டுள்ளனர்.
வித்தியாசமான கெட்அப்பில் இருக்கும் இந்த ஃபோட்டோ தற்போது செம வைரலாகி வருகிறது. இந்த ஃபோட்டோவை ஏ.ஆர்.ரஹ்மான் பகிர்ந்த 4 மணி நேரத்தில் நான்கரை லட்சம் பேர் லைக் செய்துள்ளனர். சிலர் டைரக்ஷனைத் தொடர்ந்து படத்திலும் நடிக்க போகிறீர்களா, அதற்கான கெட்அப் தானா இது என கேட்டுள்ளனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன், ஷாருக்கானை வைத்து அட்லீ இயக்கும் ஜவான், பார்த்திபன் இயக்கும் இரவின் நிழல் உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.