செய்திகள்தமிழகம்

மோர்தானா அணையில் இன்று தண்ணீர் திறப்பு பாசன கால்வாயை சேதப்படுத்தும் நபர்கள் மீது குண்டர் சட்டம் பாயும்: வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரிக்கை

74views

மோர்தானா அணையில் இருந்து குடிநீர் மற்றும் பாசன தேவைக்காக இன்று தண்ணீர் திறக்கப்படவுள்ளது. பாசன கால்வாயை சேதப்படுத்துபவர்கள், மோட்டார் மூலம் தண்ணீரை திருடுபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் எச்சரித்துள்ளார்.

வேலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்றாக மோர்தானா அணை உள்ளது. தமிழக- ஆந்திர எல்லையில் கவுன்டன்யா ஆற்றின் குறுக்கே 11.50 மீட்டர் உயரத்துடன் கட்டப்பட்டுள்ள அணையில் சுமார் 260 மில்லியன் கன அடி நீரை தேக்கி வைக்க முடியும். அணையில் தற்போது 11.40 மீட்டர் உயரத்துக்கு நீர் இருப்பு உள்ளது. எனவே, பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் இன்று (ஜூன்-19) காலை திறந்து வைக்கவுள்ளார்.

அணை திறக்கப்படுவதால் வலதுபுற பிரதான கால்வாய் வழியாக 12 ஏரிகளுடன் 25 கிராமங்களில் உள்ள சுமார் 3,937 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இடதுபுற கால்வாய் வழியாக 7 ஏரிகளுக்கும் 19 கிராமங்களில் சுமார் 4,227 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். பொது கால்வாயில் நேரடி பாசனம் மூலம் 110.580 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது.

அணையில் இருந்து கடைமடை வரை கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாசன கால்வாய் சீர் செய்யப்பட்டுள்ளது. அதேநேரம், கால்வாய் கரையை உடைத்தும் ஷட்டர்களை சேதப்படுத்தியும் தண்ணீரை திருடுபவர்கள் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை கண்காணிக்க வருவாய்த் துறை, காவல் துறை, பொதுப்பணித் துறை, உள்ளாட்சி அமைப்புகளின் அலுவலர்கள் உள்ளடங்கிய குழுவினர் ஈடுபடவுள்ளனர்.

இது தொடர்பாக வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”மோர்தானா பாசன கால்வாய் கரையை சேதப்படுத்துபவர்கள், மதகின் ஷட்டர் களை உடைப்பவர்கள், மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சுப வர்கள் மீது குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள்.

இதுதொடர்பாக ஒவ்வொரு கிராமத்திலும் கிராம நிர்வாக அலுவலர்கள் மூலம் தண்டோரா வாயிலாக எச்சரிக்கை விடுக்கப் பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

மோர்தானா அணையில் இருந்து கடைமடை வரை கால்வாய் வழியாக தண்ணீர் செல்ல ரூ.48 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பாசன கால்வாய் சீர் செய்யப்பட்டுள்ளது.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!