இந்தியா

மேகதாது அணை விவகாரம்: தமிழகத்துக்கு எதிராக கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம்

176views

மேகதாது அணைக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், அதற்கு கண்டனம் தெரிவித்து கர்நாடக பேரவையில் இன்று தீர்மானம் நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடகா அரசு முயற்சித்து வருகிறது. இந்த அணை கட்டப்பட்டால் காவிரியில் இருந்து தமிழகத்துக்கு கிடைக்கும் தண்ணீரின் அளவு வெகுவாக குறைந்துவிடும் எனக் கூறி இத்திட்டத்துக்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. எதிர்ப்பை முன்னிறுத்தி, கர்நாடகாவின் முயற்சிக்கும் எதிராக தமிழக சட்டப்பேரவையில் நேற்று முன்தினம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானத்துக்கு கர்நாடகாவில் உள்ள அனைத்து கட்சிகளும் கண்டனம் தெரிவித்துள்ளன. குறிப்பாக தமிழக அரசின் தீர்மானத்துக்கு கர்நாடகா முதல்வர் பசவராஜ் பொம்மை கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து முதல்வர் பசவராஜ் பொம்மை தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், “மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது சட்ட விரோதமான ஒன்று. மற்றொரு மாநிலத்தின் உரிமையில் தலையிட்டதன் மூலம் இது மக்களுக்கு எதிரான தீர்மானம் ஆகும். என்ன நடந்தாலும் மேகதாது அணை திட்டத்தை கர்நாடகா அரசு செயல்படுத்தியே தீரும்” என கூறியிருந்தார்.

இப்படியாக கர்நாடகாவில் அரசியல் தலைவர்கள் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தால், தமிழக அரசு நிறைவேற்றியுள்ள தீர்மானத்திற்கு எதிராக கர்நாடக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற உள்ளனர். அந்த தீர்மானம், இன்று கர்நாடக சட்டப்பேரவையில் நிறைவேறுமென தெரிகிறது.

 

Right Click & View Source is disabled.

error: Content is protected !!