கிறிப்டோ கரன்சி எனப்படும் மெய்நிகர் நாணய முதலீட்டில் அளவுக்கு மீறிய லாபம் என உறுதியளித்து இளைஞர்களை தவறாக வழிநடத்த நடக்கும் முயற்சி தடுக்கப்பட வேண்டும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
மெய்நிகர் நாணய பரிவர்த்தனை பல நாடுகளில் பயன்பாட்டில் உள்ள நிலையில், இந்தியாவில் அதற்கு கடந்த ஆண்டில் ரிசர்வ் வங்கி தடை விதித்தது. ஆனால், கடந்த மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் அந்தத் தடையை விலக்கி தீர்ப்பளித்தது. இதையடுத்து, மின்னணு வடிவிலான மெய்நிகர் நாணய பரிவர்த்தனையை பாதுகாப்பு அம்சங்களுடன் அறிமுகம் செய்ய ரிசர்வ் வங்கி ஆலோசித்து வருகிறது. மத்திய நிதி அமைச்சகமும், உள்துறை அமைச்சகமும் ஆலோசனை நடத்தியுள்ளன.
இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் மெய்நிகர் நாணய பரிவர்த்தனை குறித்த ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அதில் பேசிய பிரதமர், அதிகப்படியான வாக்குறுதிகள் மூலம் இளைஞர்கள் தவறாக வழிநடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். மெய்நிகர் நாணய பரிவர்த்தனை மூலம் பணமோசடி மற்றும் பயங்கரவாதத்திற்கு உதவும் அபாயம் உள்ளதாகவும் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, மெய்நிகர் நாணய பரிவர்த்தனை தொடர்பான விளம்பரங்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.