மூத்த குடிமக்களுக்கு ‘எல்டர் லைன்’ என்ற பெயரில் ‘ஹெல்ப் லைன்’ வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு இன்று தொடங்கி வைக்கிறார்.
60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ‘எல்டர் லைன்’ என்ற பெயரில் ஹெல்ப் லைன் வசதியை மத்திய அதிகாரமளித்தல் மற்றும் சமூகநீதி அமைச்சகம் ஏற்படுத்தியுள்ளது. முதியோருக்கான சர்வதேச தினமான இன்று (அக்.1), இந்த வசதியை குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு தொடங்கி வைக்கிறார். இதுகுறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தனித்துவமான எண் (14567), ஒரே அழைப்பு மேலாண்மை ஆகியவற்றை கொண்டு, தேசிய அளவிலான கட்டமைப்பின் மூலம் மூத்த குடிமக்களுக்கு சேவைகளை வழங்குவதற்காக ஒவ்வொரு மாநிலத்திலும் மாநில உதவி மையங்களை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டது. ‘எல்டர் லைன்’ என்ற இந்த உதவி மையம் வாரத்தின் 7 நாட்களிலும் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை செயல்படும். 14567 என்ற கட்டணமில்லா எண்ணில் இதனை தொடர்பு கொள்ளலாம்.
இந்த வசதி இரண்டு முக்கிய கூறுகளை கொண்டுள்ளது. முதியவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அதிகாரிகள் அறிந்து கொள்வதற்கான ஒரு இணைப்பு மையமாக இது இருக்கும். மூத்த குடிமக்கள் கோரிய சேவைகளுக்கான கள ஆதரவை இந்த மையம் அளிக்கும்.
தெலங்கானா, தமிழ்நாடு, மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரபிரதேசம் ஆகிய மாநிலங்களில் 14567 என்ற கட்டணமில்லா எண்ணில் ‘எல்டர் லைன்’ வசதி செயல்பாட்டுக்கு வந்துவிட்டது.
இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.