இந்தியா

முழு ஊரடங்குக்கு இப்போது அவசியமில்லை.. அது கடைசிக் கட்டம்தான்.. மோடி அறிவிப்பு

140views

நாட்டு  மக்கள் அனைவரும் இணைந்தால் கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்றும் சரியான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் மீண்டும் லாக்டவுன் வருவதைத் தடுக்கலாம் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலை ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு வாரமாகவே மாநிலத்தில் தினசரி கொரோனா பாதிப்பு 2 இலட்சத்தைத் தாண்டியுள்ளது.

இந்நிலையில், நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் கொரோனா தடுப்பூசிகள் குறித்து பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.

அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி, “கொரோனாவால் நாம் மீண்டும் மிகப் பெரிய பாதிப்பைச் சந்தித்து வருகிறோம். கொரோனாவால் உயிரிழந்தவர்களின் துக்கத்தில் நான் பங்கெடுக்கிறேன், மக்களின் கஷ்டம் எனக்குப் புரிகிறது. நாம் இப்போதுதான் கொரோனா முதல் அலையிலில் இருந்து மீண்டு வருகிறோம். அதற்குள் கொரோனா இரண்டாம் அலை சூறாவளியைப் போல நாட்டை தாக்கி வருகிறது. இப்போதைய பாதிப்பிலிருந்தும் நம்மால் மீண்டு வர முடியும். நாட்டு மக்கள் அனைவரும் நினைத்தால் கொரோனாவை முறியடிக்க முடியும் என நான் நம்புகிறேன்.

மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்கள் பாடுபடுகின்றனர். அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றி வருகின்றனர். எனவே, அவர்களுக்கு நாம் உறுதுணையாக இருக்க வேண்டும்.நம்முடைய பொறுமையை நாம் ஒருபோதும் இழந்துவிடக் கூடாது. ஆக்சிஜன் தேவையைப் பூர்த்த செய்யவும், ஆக்சிஜன் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாட்டு ஏற்படாமல் தடுக்கவும் தேவையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறோம். இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்ததைவிட மருந்து உற்பத்தி பல மடங்கு அதிகரித்துள்ளது. மேலும், மருந்துகள் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம்.

நாம் நாட்டில்தான் உலகின் மிகப் பெரிய மருந்து நிறுவனங்கள் உள்ளன. எனவே கவலை கொள்ளத் தேவையில்லை. மிகக் குறுகிய காலத்தில் அதிகளவிலான மருந்துகளை உற்பத்தி செய்துள்ளோம். உலகிலேயே மிகக் குறைந்த விலையில், தடுப்பூசி இந்தியவில் தான் வழங்கப்படுகிறது. நாட்டில் அனைவருக்கும் தடுப்பூசி கிடைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது நாட்டில் 12 கோடி பேருக்குத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன, முன்களப் பணியாளர்கள் முதியவர்களுக்கு பெரும்பாலும் தடுப்பூசிகள் போடப்பட்டுவிட்டன. 18 வயதுக்கு மேற்பட்டோரும் வரும் மே 1ஆம் தேதி முதல் தடுப்பூசிகளைப் போட்டுக்கொள்ளலாம், நாட்டிலுள்ள ஏழை மக்களுக்கும் நடுத்தர பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்படும் பணிகள் தொடர்ந்து நடைபெறும்.

50% கொரோனா தடுப்பூசிகள் மாநிலங்களுக்கு நேரடியாகவே வழங்கப்படுகின்றன. பொருளாதாரம் பாதிக்கப்படாத வகையில் கொரோனா பரவலைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். வெளி மாநில தொழிலாளர்கள் இருக்கும் இடத்தில் இருந்து வெளியேற தேவையில்லை. அவர்கள் வெளியேறாத வகையில் தேவையான நடவடிக்கைகளை மாநில அரசுகள் எடுக்க வேண்டும். நாம் மாஸ்க்குகள் முதல் வென்டிலேட்டர்கள் வரை பெரியளவில் உற்பத்தி செய்து சாதனை செய்துள்ளோம்.

கடந்த ஆண்டு இருந்த மோசமான நிலை தற்போது இல்லை. எனவே தற்போதைய சூழ்நிலையில் முழு லாக்டவுன் தேவையில்லை. ஊரடங்கு என்ற ஆயுதத்தை மாநில அரசுகள் கடைசியாகவே பயன்படுத்த வேண்டும். மக்களின் கூட்ட முயற்சியால் ஊரடங்கை நாம் தவிர்க்கலாம். கொரோனாவுக்கு எதிரான போரில் சரியான விஷயங்களைச் செய்ய இளைஞர்கள் செய்ய வேண்டும். நாம் கட்டுப்படுவதன் மூலம் கொரோனா கட்டுப்படுத்த முடியும். அவசியமற்ற பணிகளுக்கு வெளியே செல்லாமல் முடிந்தவரை வீட்டிலிருந்தபடியே பணியாற்ற வேண்டும்” என்று பிரதமர் மோடி பேசினார்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!