ரஜினிகாந்தின் இளையமகளான செளந்தர்யாவின் ‘ஹூட்’ செயலியை நடிகர் ரஜினி கடந்த திங்கட்கிழமை அறிமுகப்படுத்தினார். எழுத படிக்க தெரியாதவர்கள் இந்த செயலி வாயிலாக மற்றவர்களுக்கு தாங்கள் சொல்ல வரும் கருத்துக்களை, தங்கள் சொந்த குரல் வாயிலாக தெரிவிக்கலாம் எனவும், வருங்காலத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போல இந்த ஹூட் செயலி பிரபலம் அடைய வாழ்த்துவதாகவும் நடிகர் ரஜினிகாந்த் தனது குரல் பதிவில் அப்போது தெரிவித்தார்.
ஹூட் ஆப் அறிமுக விழாவில் பேசிய செளந்தர்யா, கிளப் ஹவுஸ், ட்விட்டர் ஸ்பேசஸ் போல் இல்லாமல், யார் வேண்டுமானாலும் குரல் பதிவு செய்யும் வகையில் ஹூட் செயலி வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அனைத்து பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்ததாகவும் இது இருக்கும் என தெரிவித்தார்.
அதோடு குறுஞ்செய்திகளில் நாம் பயன்படுத்தும் எழுத்துகளுக்கு உணர்வுகள் இல்லை எனவும், ஆனால் ஒருவரின் குரலுக்கு உணர்வுகளை தரும் வலிமை இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் செளந்தர்யா தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்றுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், “மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை சந்தித்து ‘Hoote’ App.ஐ பற்றி விவரித்து, அவருடைய வாழ்த்துகளை பெற்றதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.