சிறுகதை

மீனாவும் பட்டாம்பூச்சியும்

294views

மீனாவும் பட்டாம்பூச்சியும்

 

ஒரு கதை சொல்றேன் , ரொம்ப பெரிய லெவல் எதிர்பாக்காதீங்க ,சிம்பிள் கதைதான் . என்னோட பேர் சிவா,
facebook ல , ரொம்ப நாள் முன்னாடி ID ஓபன் பண்ண புதுசுல நடந்துச்சு .
அன்னிக்கு செம மூடவுட் ல இருந்தேன் , ”Feeling upset ” னு போஸ்ட் பண்ணேன். அப்போ ” Meena Patel ” ஒரு
பொண்ணு , மொத தடவையா லைக் பண்ணுச்சு , அதோட பேஜ் ல போயி பாத்தேன் , நிறைய பட்டாம்பூச்சி
படமா போட்டு வச்சிருந்துச்சு . அது 21 Feb ல பொறந்து இருக்கு , வருஷம் இல்ல . குஜராத் ல இருக்கு போல .
வேற எதுவும் கண்டுபுடிக்க முடில .
HI னு ஒரு மெசேஜ் போட்டு உட்டேன் ,
”இரவு வணக்கம் ” னு பதில் போட்டுச்சு .
”தமிழ் தெரியுமா ” னு கேட்டேன்
” தெரியாது ” னு தமிழ் லேயே போட்டுச்சு .
” எங்க வேலை பாக்றீங்க ” னு கேட்டேன்
” அப்பாவின் வணிகத்தில் பணி செய்து கொண்டிருக்கிறேன் ” னு போட்டுச்சு .
ஆஹா , புரிஞ்சு போச்சு , இதுக்கு தமிழ் சரியா தெரில , Google translate வச்சு reply பண்ணுது னு புரிஞ்சுது.
அப்புறம் ஊர் பேரு கேட்டேன் , போட்டோ கேட்டேன் , அனுப்புச்சு . ரொம்ப அழகா இருந்தா.
என்னோட போட்டோ கேட்டா .அனுப்பினேன் .
தினமும் குட் மார்னிங் . குட் நைட் மெசேஜ் அனுப்புவா ,
எல்லாமே பட்டாம்பூச்சி படத்தோட அனுப்புவா .
” எதுக்கு பட்டாம்பூச்சி படமா அனுப்பறேன்னு ”ஒரு நாள் கேட்டுட்டேன் .
அதான் எனக்கு ரொம்ப புடிக்கும்னு சொன்னா .
ஏன் புடிக்கும்னு கேட்டேன் .
அது எல்லாம் புழுவா பொறந்து , இலையை சாப்பிட்டு வாழ்ந்துட்டு இருக்கும் . அப்பறம் அந்த வாழ்க்கை ஒரு
நாள் முடிஞ்சு போகும் . ஒரு கூடு கட்டி உள்ள இருந்து , திடீர்னு ஒரு நாள் றெக்கையோட வெளில வரும் ,
அதோட வாழ்க்கையே சுத்தமா மாறிடும் . வானத்துல பறக்கும் . அங்க போகும் . இங்க போகும் . பூ மேல
உக்காந்து தேன் குடிக்கும் , ரொம்ப சந்தோசமா மாறிடும் . புழுவாவே இருந்து செத்துப்போகாம , பட்டம்பூச்சியா
மாறி , தான் ஆசைப் பட்டதெல்லாம் சந்தோசமா செஞ்சு பாத்துடும், அதனால தான் எனக்கு பட்டம்பூச்சிய
ரொம்ப புடிக்கும்னு சொன்னா ,
எனக்கு அவ சொன்ன விஷயம் ரொம்ப புடிச்சு இருந்துச்சு .அப்போ இருந்து
மீனாவையும் பட்டாம்பூச்சியையும் ரொம்ப புடிக்க ஆரம்பிச்சுது
அன்னிக்கு ஒரு நாள் friendship day வந்துச்சு
பாட்டாம்பூச்சி போட்டோ அனுப்பி விஷ் பண்ணி இருந்தா .
” உனக்கு GIft குடுக்கட்டுமா ”
”சரி, கொடு ”
” நேர்ல வந்து கொடுக்கட்டுமா ”
” எப்போது வருவாய் ”
” இப்போ ”
” சரி ”
” குஜராத் வந்துட்டேன் , நீ எங்க இருக்க சொல்லு ”
”வடோதரா ”
” வடோதரா வந்துட்டேன் , அங்க எங்க வரணும் ”
”அஜ்வானி மேட்டா ”
”அஜ்வானி மேட்டா வந்துட்டேன் , அங்க எங்க வரணும் ”
”படே ஹனுமான் மந்திர் பக்கத்து தெரு ”
” தெருவுக்குள்ள வந்துட்டேன் ”
” நாலாவது வீடு ”
” வந்துட்டேன்”
” வீட்டிற்கு முன் ஒரு தோட்டம் இருக்கிறது . அங்கே பல பட்டாம்பூச்சிகள் பறந்து கொண்டிருக்கின்றன ”
” கதவ திறந்து பாரு ”
” பார்த்துவிட்டேன் , ஆனால் நீ இங்கு இல்லை ”
” அவசரத்துல என்னோட உடம்ப இங்க விட்டுட்டு வந்துட்டேன். அதான் உன்னால என்னைப் பார்க்க முடில
.. ஆனா உணர முடியும் ”
” உணர்கிறேன் , உன் பரிசு எனக்கு மிகவும் பிடித்து இருக்கிறது , நன்றி ” னு சொன்னா .
” I love you ”
” நன்றி , நானும் உன்னை நேசிக்கிறேன் ” னு சொன்னா . எனக்கு நிஜமாவே ரெக்கை வளந்த மாதிரி இருந்துச்சு.
அவ தான் என்னோட வாழ்க்கைனு முடிவு பண்ணிட்டேன் .
இப்படியே கொஞ்ச நாள் போச்சு . அவ எப்போ ஆன்லைன் வருவான்னு காத்துட்டு இருந்தேன் .
ஒரு நாள் அவ போட்ட போஸ்ட்க்கு சில பேர் close ஆ கமெண்ட் பண்ணி இருந்தாங்க ,அவளும் பதிலுக்கு close
ஆ பண்ணி இருந்தா . எனக்கு அது பாத்து செம கோபம் வந்துச்சு . நாமளும் இதோட நிறுத்திக்கணும்னு
தோணுச்சு ,
அவ அனுப்பற மெசேஜ் க்கு கூட நான் ரிப்ளை பண்ணவே இல்ல . ஒரு வாரம் அப்படி அனுப்பிட்டே இருந்தா
,நான் கண்டுக்கவே இல்ல , எனக்கும் அவளோ கோபம் .
ஒரு நாள் மெசேஜ் பண்ணி இருந்தா ‘
” எதனால் கோபம் , மன்னித்துவிடுங்கள் ” னு
அன்னிக்கு நல்லா திட்டிவிட்டேன் .
” நன்றாக திட்டுங்கள் . இன்னும் சில மாதங்கள் தானே ”
”ஏன் , அதுக்கு அப்புறம் என்ன ஆகும் ”
” நான் , இருக்க மாட்டேன் சிவா ”
” ஏன் ,அப்படி சொல்ற ”
” எனக்கு Blood Cancer . last stage ”
”விளையாடாத உனக்கு அதெல்லாம் வராது மீனா , நான் நம்ப மாட்டேன் ”
” இன்னும் 4 ,5 மாதங்கள் , அதற்கு பிறகு என்னிடம் இருந்து எந்த செய்தியும் வராது , அதற்கு பிறகு நம்பு சிவா

அவ இப்படி சொன்ன உடனே என்னோட ரெக்கைகள
வெட்டின மாதிரி இருந்துச்சு . எல்லாத்தையும் இழந்த மாதிரி இருந்துச்சு .
”என்னை மன்னிச்சுடு , நான் உன்ன ரொம்ப கஷ்டப்படுத்திட்டேன் ”
” Sorry ,Sorry , today is April 1, I was just kidding ”
அப்பாடா எனக்கு அப்போதான் போன உயிர் திரும்ப வந்துச்சு , அவ எப்பவுமே இதே மாதிரி
விளையாட்டுத்தனமா ஏதாவது பேசிட்டு இருப்பா .
அதுக்கு அப்புறம் நான் அவ கிட்ட கோபப்படவே இல்ல, சந்தோசமா பேசிட்டு இருந்தோம் . உண்மையான
அன்புனா என்னனு அவ பேச்சுல தான் தெரிஞ்சுது .நான் அவ்வளவு சந்தோசமா இருந்தேன் .
எல்லா விஷயத்தையும் எப்படி பாஸிட்டிவா பாக்கறது ,சின்ன விஷயத்துக்காக கவலைப் படாம எப்படி
சந்தோசமா இருக்கறதுனு நிறைய சொல்லி கொடுத்தா .போன்ல கூட பேச ஆரம்பிச்சோம் . English ல தான்
பேசுவோம் .
அதுல இருந்து ஆறுமாசம் கழிச்சு அவ கிட்ட இருந்து ரிப்லை வரவே இல்ல , போனும் சுவிட்ச் ஆப் . எனக்கு
ஏதோ ரொம்ப பயமா இருந்துச்சு . அவ விளையாட்டா சொன்னது நிஜம் தானோனு தோணுச்சு . இல்லேன்னா
அவளுக்கு கல்யாணம் கூட ஆகி இருக்கலாம் . அவ நல்லா இருந்த அதுவே போதும் னு ஒரு எண்ணம் .
எனக்கு அந்த உண்மையானு தெரிஞ்சிக்கற தைரியம் இல்ல ,அவளுக்கு மறக்காம தினமும் , குட் மார்னிங், குட்
நைட் ,மட்டும் அனுப்பிடுவேன் .
அதுக்கு அப்புறம் பிப்ரவரி மாசம் வந்துச்சு , 21 அவ பொறந்த நாள் , அவளுக்கு பொறந்த நாள் பரிசு
கொடுக்கணும்னு தோணுச்சு , அவளை பாக்க கிளம்பிட்டேன் .
ஒரு நாள் காலைல ஆபிஸ்ல லீவ் சொல்லிட்டு , சென்ட்ரல் ஸ்டேஷன் போனேன் . நவஜீவன் எக்ஸ்பிரஸ்
போகும்னு சொன்ன்னாங்க ஏறிட்டேன். அடுத்த நாள் தான் , வடோதரா வந்துச்சு , இறங்கி வெளிய வந்தேன் .
அஜ்வானிமேட்டா , படா ஹனுமான் டெம்பிள் னு சொல்லிட்டு ஆட்டோ உள்ள உக்காந்தேன் கரெக்ட் டா ஒரு
கோவில் வாசல் ல இறக்கி வுட்டாரு. அடுத்த தெருவுக்கு நடந்து போனேன்.நாலாவது வீடு , அவ சொன்ன
மாதிரி தோட்டம் இருந்துச்சு , நிறைய பட்டாம்பூச்சிங்க பறந்தது இருந்துச்சுங்க. வீட்ல ஒரே கூட்டமா இருந்துச்சு
.
அவங்க சொந்தக்காரக் குழந்தைங்க போல , அங்க இங்க ஓடிபுடிச்சு விளாடிட்டு இருந்தாங்க .
ஒரு பெரியவர் , அவங்கள பாத்து சிரிச்சிட்டே ஏதோ சொன்னார் , அவர் தான் மீனாவோட அப்பா.
நான் அவர் முன்னாடி போயி நின்னேன் , சிரிச்சிட்டே கும்பிட்டாரு , உள்ள வர சொன்னாரு , சில பொண்ணுங்க
வந்து ஜூஸ் குடுத்துங்க , யார் நீ னு என்னை கேக்கவே இல்ல .
வீடு முழுக்க பலூன் , எல்லாரும் அவ்ளோ சந்தோசமா இருந்தாங்க ..
ஒரு பெரிய கேக் கொண்டு வந்து வச்சாங்க ,
அந்த பெரியவர் , ”மீனா , மீனா ” கூப்டாரு
ஒரு பட்டாம்பூச்சி பறந்து வந்துச்சு. ஆமாங்க நிஜ பட்டாம்பூச்சி. மீனா கூட இதே மாதிரி பட்டாம்பூச்சியதான் அவ
profile picture ஆ வச்சிருந்தா ,. அது அந்த கேக் ல உக்காந்துட்டு பறந்து போச்சு , எல்லாரும் க்ளாப் பண்ணாங்க ,
நானும் பண்னேன் .
மீனா அப்பாதான் கேக் வெட்டினாரு , எனக்கும் ஒரு கேக் பீஸ் கொடுத்தாங்க , சாப்டுட்டு இருக்கும் போதே
அதே பட்டாம்பூச்சி என்னோட தோள் மேல வந்து உக்காந்துச்சு .
ஆயிரம் டன் மேகம் , ஒரு மலை சிகரத்துமேல படர்ந்து போகுமே அந்த மாதிரி ஒரு சுகமான கனம் என்னோட
தோள்ல அழுத்துச்சு . எனக்கு அழணும் போல இருந்துச்சுங்க .அப்புறம் அது பறந்து போச்சு . நான் வெளிய
வந்துட்டேன் ,
ஆட்டோ , புடிச்சு , ட்ரெயின் மாறி மாறி எப்படியோ வீடு வந்து சேந்தேன் . சோகமா இந்த கதையை முடிக்க
முடியாது . மீனாவுக்கு அது எல்லாம் புடிக்காது . அந்த பட்டாம்பூச்சி உக்காந்த எடை இப்பவும் என்னோட
தோள்ல இருக்கு . மீனா அவ சொன்ன மாதிரியே அந்த பட்டாம்பூச்சியா மாறி எங்கேயோ சந்தோசமா பறந்துட்டு
இருப்பா .

 

  • எழுதியவர் தமிழ் செல்வன்

Right Click & View Source is disabled.

error: Content is protected !!