செய்திகள்தமிழகம்

மீனவர்களுக்கு தனி வங்கி உருவாக்க நடவடிக்கை: கனிமொழி எம்.பி. உறுதி

133views

மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் பேசி முயற்சி மேற் கொள்ளப்படும் என கனிமொழி எம்.பி. தெரிவித்தார்.

தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் மற்றும் மீனவர்களுக்கான நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. மக்களவை உறுப்பினர் கனிமொழி தலைமை வகித்தார். மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன், சமூக நலத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, ரூ.25 கோடி மதிப்பீட்டில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகத்தில் கூடுதல் படகு அணையும் தளம் அமைக்கும் பணிக்கு கனிமொழி எம்.பிஅடிக்கல் நாட்டினார். 12 மீனவர்களுக்கு ரூ.5.05 லட்சம் மானியத்தில் நாட்டுப் படகில் வெளிப்பொருத்தும் இயந்திரத்தை வழங்கினார். பின்னர் அவர் பேசியதாவது:

தமிழகத்தில் மீனவர்களின் குறைகளை அவர்களின் பக்கம் நின்று கேட்டு நிறைவேற்றும் விதமாக திமுக அரசு செயல்படுகிறது. பல திட்டங்களை மீனவர்களின் நலனுக்காக அரசு செயல்படுத்தும். விரைவில் மீன்களை பதப்படுத்தி பத்திரமாக சேகரிக்கும் குளிரூட்டப்பட்ட அறை கட்டித்தரப்படும். மீனவர்களுக்கென தனி வங்கி உருவாக்குவதற்கு மத்திய அரசிடம் பேசி முயற்சி மேற்கொள்ளப்படும். ரூ.88 கோடியில் தூத்துக்குடி மீன்பிடித் துறைமுகம் விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கையும் எடுக்கப்படும்,’ என்றார்.

நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேசும்போது, ”மீனவர்களின் நீண்ட நாள் கோரிக்கைகளான டீசல் மானியம், தடைக்கால நிவாரணத் தொகையை ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்குவது உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் வரும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் தாக்கலின் போது வெளியிடப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்” என்றார்.

நிகழ்ச்சியில், மீன்வளத்துறை மண்டல இணை இயக்குர் அமல்சேவியர், மீன்பிடித் துறைமுக திட்டக் கோட்ட செயற்பொறியாளர் கங்காதரன், மீன்வளத்துறை உதவி இயக்குநர் விஜயராகவன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Right Click & View Source is disabled.

error: Content is protected !!