பிரபாஸ் நடிக்கும் 25-வது படத்தை இயக்கும் வாய்ப்பு பிரசாந்த் நீலுக்கு கிடைத்துள்ளதாகவும், இந்த படம் வரலாற்றுப் பின்னணியில் உருவாகவுள்ளது எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகுபலி பிறகு பான் இந்திய நடிகராக மாறிவிட்டார் பிரபாஸ். அதனால் அவர் நடிக்கும் ஒவ்வொரு படமும் மொத்த இந்தியாவுக்குமான படமாக தயாராகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளை முதன்மையாக கொண்டு மற்ற மொழிகளிலும் மார்க்கெட்டை மொத்தமாக பிடித்துவிட்டார் பிரபாஸ்.
தற்போது இவர் கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் ‘சலார்’ படத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே 50 சதவீத படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு முடிந்த பிறகு மீதமுள்ள காட்சிகளுக்கு படப்பிடிப்பு துவங்கும்.
அதை தொடர்ந்து ராதே ஷ்யாம், ஆதிபுருஷ் மற்றும் நடிகையர் திலகம் பட இயக்குநர் நாக் அஸ்வினின் அடுத்த படம் என பல்வேறு படங்களை பிரபாஸ் கமிட் செய்து வைத்துள்ளார். இவை அனைத்துமே பான் இந்தியா படங்களாக தயாராகவுள்ளது.
இந்நிலையில் இவருடைய 25-வது படத்தை யார் இயக்குவார்கள் என்கிற எதிர்பார்ப்பு இருந்து வந்தது. தற்போது இந்த படத்தை இயக்கும் வாய்ப்பு பிரசாந்த் நீலுக்கு கிடைத்துள்ளது. ஏற்கனவே இந்த கூட்டணி சலார் படத்தில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸ் நடிக்கும் அவருடைய 25-வது படம் வரலாற்றுப் பின்னணியில் தயாராகவுள்ளது. இதை தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளராக தில் ராஜூ தயாரிக்கவுள்ளார். பிரபாஸின் மற்ற படங்களை போலவே இதுவும் பான் இந்திய படமாகவே தயாராகவுள்ளது.